/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நிறுத்தப்பட்ட மேம்பால பணி துவங்குவது எப்போது? 5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் அவலம்
/
நிறுத்தப்பட்ட மேம்பால பணி துவங்குவது எப்போது? 5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் அவலம்
நிறுத்தப்பட்ட மேம்பால பணி துவங்குவது எப்போது? 5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் அவலம்
நிறுத்தப்பட்ட மேம்பால பணி துவங்குவது எப்போது? 5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் அவலம்
ADDED : ஜன 02, 2024 11:56 PM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மேம்பால பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு 5 ஆண்டுகளாகியும் துவக்கப்படாமல் உள்ளதால்பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
உளுந்துார்பேட்டை பகுதியில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரிப்பால் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதித்து வந்தது. இதனால் குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்து வந்தனர்.
வாகன பெருக்கத்திற்கு ஏற்ப, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலை விரிவாக்கம் செய்வதற்காக நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக சென்னை முதல் திருச்சி வரையிலான நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2004ம் ஆண்டு துவங்கியது.
இதேபோன்ற உளுந்துார்பேட்டை டோல்கேட் முதல் பாடலுார் வரையிலான 55 கிலோ மீட்டர் துாரம் சாலை அகலப்படுத்தப்பட்டு, நான்கு வழி சாலை அமைக்கும் பணியினை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டி.டி.பி.எல். நிறுவனம் துவக்கி முடித்தது.
2009 ம் ஆண்டு நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடைந்து வாகனப் போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் எந்தெந்த பகுதியில் மேம்பாலம் அமைப்பது, சர்வீஸ் சாலை அமைப்பது, என சரியான திட்டமிட்டு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், அதிக விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளை என கண்டறியாமல் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது.
அவ்வாறு அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலலையில்விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் அதிகரித்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மத்திய, மாநில அரசுகளுக்கு, புகார்கள் அளித்தனர்.
அதன்பேரில் கடந்த 2014-ம் ஆண்டு அதிக விபத்துக்கள் நடக்கும் பகுதிகளை கண்டறிந்து ஆய்வு அறிக்கையை அளிக்கும்படி தேசிய நெடுஞ்சாலை துறையிடம் மத்திய அரசு கேட்டிருந்தது.
அதன் பின்னரே உளுந்துார்பேட்டை- விருத்தாசலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள மேம்பாலம் அருகே மற்றும் உளுந்துார்பேட்டை அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே சர்வீஸ் சாலைகள் அமைக்கவேண்டும் எனவும், ஸ்ரீ சாரதா ஆசிரமம் முன்பு, பாலி 10 பட்டாலியன் அணி(போலீஸ் பயிற்சி மையம்) முன்பு, ஆசனுார் , சிறுவாச்சூர், ஆவட்டி பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைப்பது என முடிவு செய்யப்பட்டு ரூ. 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு,பணிகள் கடந்த 2019 ஆண்டில் துவங்கியது. ஆனால் டெண்டர் விடப்பட்ட இடங்களில் பணிகள் துவங்கிய வேகத்திலேயே நின்று போயின.
அவற்றில் உளுந்துார்பேட்டை தாலுகா ஆசனுாரில் மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்காக சாலை அகலபடுத்தப்பட்டன. இதற்காக அங்கு சர்வீஸ் சாலை பணி துவக்கி ஜல்லி சாலை போடப்பட்டது. அதோடு பணிகள் பாதியிலேயே நின்று போயின.
அதேபோல் உளுந்துார்பேட்டை அருகே உள்ள ஸ்ரீ சாரதா ஆசிரமம் முன்பு மேம்பாலம் அமைப்பதற்காக பணிகள் துவங்கப்பட்டது.
ஆனால் அப்பணிகள் பாதிலேயே நிறுத்தப்பட்டன. பணப் பிரச்னை மற்றும் மேம்பாலம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி தொகை வழங்காததால் மேம்பால கட்டுமானப் பணிகள் துவக்கிய வேகத்திலேயே நிறுத்தப்பட்டன.
பணிகள் ஐந்து ஆண்டுகளாகியும் மீண்டும் துவக்கப்படாமல் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளன. இப்பணிகள் தொடர்ந்து நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே தேசிய நெடுஞ்சாலையில் நின்றுபோன மேம்பாலப் பணிகள், ஆசனுார் மேம்பாலம் சர்வீஸ் சாலை பணிகளை அதிகாரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து துவக்கி முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இல்லையேல் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வீணடிக்கபடுவதோடு, விபத்துக்கள், உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாகி விடும் என்பதில் சந்தேகமில்லை.