/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காட்டுசெல்லுார் துணை மின் நிலைய பணி துவங்குவது... எப்போது? மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
காட்டுசெல்லுார் துணை மின் நிலைய பணி துவங்குவது... எப்போது? மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
காட்டுசெல்லுார் துணை மின் நிலைய பணி துவங்குவது... எப்போது? மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
காட்டுசெல்லுார் துணை மின் நிலைய பணி துவங்குவது... எப்போது? மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : டிச 06, 2024 05:55 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஜி.அரியூர், மேமாளூர், செங்கனாங்கொல்லை, பொன்னியந்தல், ரிஷிவந்தியம், காட்டுசெல்லுார் என 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.
இக்கிராமங்களுக்கு திருக்கோவிலுார் மற்றும் தியாகதுருகம் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. ஆனால், துணை மின் நிலையங்களில் இருந்து இக்கிராமங்கள் வெகு தொலைவில் இருப்பதால் தாழ்வழுத்த மின்விநியோகம் செய்யப்படுகிறது.
மேலும் திருக்கோவிலுார் நகர் பகுதியில் அதிகரித்திருக்கும் மின் தேவையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதனால் விவசாய மின் மோட்டார்களுக்கு போதுமான மின் விநியோகம் வழங்கப்படுவதில்லை. அது மட்டுமின்றி நகர பகுதியில் அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது.
எனவே, செங்கனாங்கொல்லையில் புதிதாக துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் 22 ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வருகிறது. இதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இரண்டு ஏக்கர் நிலம் முறைப்படி மின் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, காட்டுச்செல்லுார் துணை மின் நிலையம் என்ற பெயரில், 10 எம்.வி.ஏ., திறன் கொண்ட இரண்டு டிரான்ஸ்பார்மர் பொருத்தி, துணை மின் நிலையம் அமைக்க மின் துறையால் திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போதய நிலவரப்படி இத்திட்டத்திற்கு 20 கோடி ரூபாய் செலவாகும் எனக் கூறப்படுகிறது. இதற்கான டெண்டர் கமிட்டி குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கி டெண்டர் வைப்பதன் மூலம் ஒப்பந்ததாரர்கள் யாரும் பணி செய்ய முன்வரவில்லை எனவும் கூறப்படுகிறது.
இப்படியே ஒவ்வொரு ஆண்டும் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைப்பதும், டெண்டர் கமிட்டி குறைவான அளவில் நிதியை ஒதுக்கி டெண்டர் விடுவதும், பணியை மேற்கொள்ள யாரும் முன் வரவில்லை என சாக்குப் போக்கு கூறி வருவதும் தொடர்கதையாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகளும், மின் நுகர்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருக்கோவிலுார் பகுதிக்கும் கூடுதல் மின் தேவை தேவைப்படுவதால் காட்டுச்செல்லுார் துணைமின் நிலையம் அத்தியாவசியமாகியுள்ளது. சம்மந்தப்பட்ட பகுதி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தனி கவனம் செலுத்தி இப்பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால் மட்டுமே காட்டுச்செல்லுார் துணை மின் நிலைய திட்டம் நிறைவேறும். இல்லையென்றால் கானல் நீராகவே போய்விடும். சம்பந்தப்பட்ட பகுதிகளின் மக்கள் பிரதிநிதிகள் முயற்சி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.