தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கோமாவிலிருந்து திருக்கோவிலுார் நகராட்சி மீள்வது  எப்போது?; அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாத அவலம்

கோமாவிலிருந்து திருக்கோவிலுார் நகராட்சி மீள்வது  எப்போது?; அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாத அவலம்

கோமாவிலிருந்து திருக்கோவிலுார் நகராட்சி மீள்வது  எப்போது?; அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாத அவலம்


ADDED : ஜூன் 27, 2026 01:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2026 01:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகரமன்ற கூட்டம் 5 மாதங்களாக கூட்டாமல் கோமா நிலையில் கிடப்பதால் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்ற முடியாமல் இருப்பதாக நகராட்சி கவுன்சிலர்கள் புலம்பி வருகின்றனர். திருக்கோவிலுார் நகராட்சியாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தரம் உயர்த்தப்பட்டது. 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டு, கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நகராட்சிக்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், புதிய நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணி திட்டங்களும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக சந்தைப்பேட்டையில் 1.20 கோடி ரூபாய் மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு, தேர்தலுக்கு முன் திறக்கப்பட்டது. இங்கு செல்வதற்கான முறையான தார் சாலை, தெரு விளக்கு, மருத்துவமனையில் மின் விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. இதனால் சுகாதார நிலையம் குடி பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளது.

இதேபோல் மேற்கு வீதி, சன்னதி வீதி உள்ளிட்ட பல தெருக்களில் கழிவு நீர் வழிந்தோட முறையான கால்வாய் வசதி இல்லாததால், தண்ணீர் தேங்கி அவ்வப்போது சாலையில் ஓடும் அவலமும் அரங்கேறுகிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக குப்பைகள் அள்ளுவதிலும் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நகராட்சிக்கு 4 லாரிகள், 4 டாட்டா ஏஸ், 2 பேட்டரி வாகனம் என குப்பை அள்ளுவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தனியார் நிறுவனம் குப்பை அள்ளும் பணியை மேற்கொண்டு வருவதால், அந்நிறுவனத்திடம் 2 லாரிகள், 4 டாட்டா ஏஸ், 2 பேட்டரி வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் லாரியை முறையாக பராமரிக்காமல் பழுதானது.

தற்போது பயன்பாட்டில் 3 டாட்டா ஏஸ் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நகராட்சியின் 27 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் 7 கி.மீ., துாரத்தில் கனகனந்தலில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

நகராட்சிக்காக வாங்கப்பட்ட கழிவுநீர் லாரி, மினி ஜே.சி.பி., பயன்படுத்தப் படாமல் நகராட்சி வளாகத்திற்குள்ளேயே மாதக்கணக்கில் மக்கி வீணாகிறது. ஆனால், இதற்கான பராமரிப்பு செலவுகளும், ஓட்டுநருக்கான சம்பளமும் நகராட்சி மூலம் மாதாமாதம் தாராளமாக வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

சந்தைப்பேட்டை தீயணைப்பு நிலையத்திலிருந்து பைபாஸ் வரை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக குடிநீர் பைப் லைன் ஆங்காங்கே சேதமடைந்து கழிவு நீர் குடிநீருடன் கலக்கும் சூழல் நிலவுகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக சாலையின் இரண்டு பக்கமும் புதிய குடிநீர் குழாயை பதிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வரும் நிலையில் இதனை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி கவுன்சிலர்கள் புலும்புகின்றனர்.

வீட்டுமனை பிரிவிற்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட ஒரு சில பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தும் நகராட்சி நிர்வாகம் நகரின் அடிப்படை கட்டமைப்புகளையும், மக்களுக்கான வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு தயங்குவதற்கான காரணம் புரியவில்லை.

மொத்தத்தில் திருக்கோவிலுார் நகராட்சி நிர்வாகம் கோமா நிலையில் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். காரணம் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் நடந்த நகர மன்ற கூட்டத்திற்கு பிறகு, கடந்த 5 மாதங்களாக கூட்டமே நடக்கவில்லை என்பது ஒட்டுமொத்த நகர மன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களின் அடிப்படை தேவைகளை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி நிவர்த்தி செய்யும் அரங்கமாக நகர மன்றம் உள்ளது. கவுன்சிலர்கள் பலர் நகராட்சி அலுவலகத்திற்கு செல்வதில்லை. அதிகாரிகளும் பொதுமக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வதில்லை என பொதுமக்கள் புகார் கூறிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us