/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள்; கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிப்பு
/
பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள்; கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிப்பு
பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள்; கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிப்பு
பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள்; கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிப்பு
ADDED : மே 05, 2025 05:52 AM
தியாகதுருகம்; மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்து வயல்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையாக உள்ள கல்வராயன் மலையில் தொடங்கி கச்சிராயபாளையம், சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய பகுதிகளில் தரைக்காடுகள் உள்ளன.
கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் இயற்கை காடுகள் அழிக்கப்பட்டு வியாபார நோக்கில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
இதன் காரணமாக காடுகளில் வாழ்ந்த வனவிலங்குகள் பெரும்பகுதி அழிந்தன. தப்பி பிழைத்த மான், காட்டுப்பன்றி, முயல், மயில், நரி உள்ளிட்ட விலங்குகள், போதிய பாதுகாப்பின்றி அழிவின் விளிம்பில் உள்ளன.
இந்த விலங்குகளுக்கு காடுகளில் போதிய உணவு கிடைப்பதில்லை. அதனால், வயல்வெளிகளில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், சமீபகாலமாக காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை மாவட்டத்தில் பன்மடங்கு உயர்ந்துள்ளன. தற்போது கரும்பு, மக்காச்சோள பயிர்கள் சாகுபடி செய்வது மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.
காட்டுப் பன்றிகளின் முக்கிய உணவாக இவை உள்ளதால் வயலுக்குள் புகுந்து அங்கேயே தஞ்சம் அடைந்து குட்டி போட்டு பல்கிப் பெருகிவிட்டன.
இதனால் கரும்பு, நெல், மக்காச்சோளம், வேர்க்கடலை, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை காட்டுப் பன்றிகளிடமிருந்து பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் காடுகளை ஒட்டி உள்ள வயல்களில் மட்டும் வனவிலங்குகளின் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளதால் பெரும்பாலான கிராமங்களில் உள்ள வயல்களில் பயிர்களை சேதப்படுத்துவது அதிகரித்துள்ளது.
விவசாயத்தை ஜீவாதாரமாகக் கொண்ட மாவட்டத்தில் காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.