/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முடியனுார் - கழுமரம் இடையே தடுப்பணை கட்டப்படுமா? ... : திருக்கோவிலுார் விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
முடியனுார் - கழுமரம் இடையே தடுப்பணை கட்டப்படுமா? ... : திருக்கோவிலுார் விவசாயிகள் எதிர்பார்ப்பு
முடியனுார் - கழுமரம் இடையே தடுப்பணை கட்டப்படுமா? ... : திருக்கோவிலுார் விவசாயிகள் எதிர்பார்ப்பு
முடியனுார் - கழுமரம் இடையே தடுப்பணை கட்டப்படுமா? ... : திருக்கோவிலுார் விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 18, 2025 04:53 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த முடியனுார் - கழுமரம் இடையே தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றில் பருவமழைக் காலங்களில் பல்லாயிரம் கன அடி நீர் பயன்படாமல் கடலில் கலக்கிறது. இதனை முறையாக பயன்படுத்திக் கொள்ள ஆற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
இது நிலத்தடி நீரை மேம்படுத்தவும், விவசாய நிலங்கள் பயன்பெறும் பாசன பரப்பளவை அதிகப்படுத்தவும் உதவும்.
அதற்கேற்ற இடமாக திருக்கோவிலுார் அடுத்த முடியனுருக்கும், கழுமரம் கிராமத்திற்கிடையே தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது வடமலையனுார், கொடியூர், வீரணாம்பட்டு, பெண்ணைவளம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட ஏரி பாசன விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இதன் மூலம் ஆற்றின் தென்புறத்தில் திருக்கோவிலுார், கட்சிக்குப்பம், ஆவிகொளப்பாக்கம், எல்ராம்பட்டு, கொடியூர், வீரணாம்பட்டு, பெண்ணைவளம், கொளத்துார் வரை 16 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும்.
அதேபோல் வடபுறத்தில் விளந்தை, கோட்டமருதுார், மணம்பூண்டி உள்ளிட்ட ஏழு ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல வழிவகை செய்யலாம். இதன் மூலம் 5000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேலும், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதன் மூலம் முடியனுார் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வறட்சி காலங்களிலும் மக்களுக்கு தடையற்ற குடிநீர் விநியோகம் செய்ய முடியும். விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து முப்போக சாகுபடி மேற்கொள்ளலாம்.
எனவே, முடியனுார் - கழுமரம் இடையிலான தடுப்பணை கோரிக்கையை நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
தொடர்ந்து, அதிக பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன்பெறும் இடம் எது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப இடத்தை தேர்வு செய்து நடப்பு நிதியாண்டிலேயே திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என திருக்கோவிலுார் பகுதி ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
பருவமழை காலங்களில் தென்பெண்ணையாற்றில் பாய்ந்து, வீணாக கடலில் கலக்கும் அவலத் திற்கு தீர்வு காண வேண்டும்.
இதேபோல் தென்பெண்ணை ஆற்றில் சாத்திய கூறு உள்ள மேலும் பல இடங்களை நீர்வளத்துறையினர் கண்டறிந்து தடுப்பணை கட்ட வேண்டும் என்பது ஒட்டுமொத்த விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.