/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சேராப்பட்டு பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படுமா?: உயர் அதிகாரிகளின் நடவடிக்கை தேவை
/
சேராப்பட்டு பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படுமா?: உயர் அதிகாரிகளின் நடவடிக்கை தேவை
சேராப்பட்டு பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படுமா?: உயர் அதிகாரிகளின் நடவடிக்கை தேவை
சேராப்பட்டு பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படுமா?: உயர் அதிகாரிகளின் நடவடிக்கை தேவை
ADDED : ஆக 29, 2024 08:13 AM
கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் மலைவாழ் மக்களின் சிரமங்களை போக்கும் வகையில், சேராப்பட்டு தலைமையிடமாக கொண்டு புதிய காவல் நிலையம் அமைக்க காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கல்வராயன்மலை 45,225 எக்டேர் பரப்பளவும், 3,000 அடி உயரமும் கொண்டுள்ளது. கல்வராயன்மலை ஒன்றியத்தில் 15 ஊராட்சிகளை உள்ளடக்கி, 50 வருவாய் கிராமம் உட்பட, 177 கிராமங்கள் உள்ளன. இங்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.
மாவட்டம் உதயமான பின்பு புதிய தாலுகாவாகவும் இயங்குகிறது. கரியாலுார் பகுதியில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட 14 போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் நிலைய சுற்று வட்டாரத்தின் எல்லைகள் சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் முடிவடைகிறது.
மலைவாழ் மக்கள், காவல் நிலையத்தில் புகார் அளிக்க கடும் சிரமத்துடன் சென்று புகார் அளிக்கும் சூழ்நிலை உள்ளது. இதற்கிடையே பல கிராமங்கள் காவல் நிலையத்தில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இதனால் புகார் தொடர்பாக சம்பவ இடத்திற்கு போலீசார் உடனடியாக நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள முடிவதில்லை. இரவு நேரங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. கடும் சிரமங்களால் பெரும்பாலோனர் புகார் அளிப்பதில்லை.
கிராமத்தில் திருட்டு, வழிபறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் மற்றும் சாலை விபத்து, கிராமங்களில் அடிதடி, தகராறு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு உடனடியாக புகார் அளிக்க முடியாமல் போகிறது.
போதிய போக்குவரத்து வசதியும் கிடையாது. மாலை நேரங்களில் சாலைகளில் பெரும்பாலும் வாகன போக்குவரத்து இன்றியே காணப்படும்.
கல்வராயன்மலையில் பெரியார், மேகம், கவ்வியம், வெள்ளி மலை, சிறுக்கலுார் அருவிகள் உள்ளன. அருவிகளில் கொட்டும் தண்ணீரில் குளிக்கவும், இயற்கை எழில் கொஞ்சும் மலை பகுதிகளை கண்டுகளிக்க பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
சில நேரங்களில் ஆறு மற்றும் அருவிகளில் இளைஞர்கள் குளிக்கும் போது கால் தவறி ஒரு சிலர் எதிபாராவிதமாக இறக்கும் சம்பவங்கள் நிகழ்கிறது. அத்தருணத்தில் வழக்கு பதிந்து அவர்களின் உடலை தேடி கண்டுபிடிப்பதற்கு போலீசார் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
அதேபோல் கல்வராயன்மலை பகுதியில் மலைகளின் நடுவே கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களை கண்டறிந்து அழிப்பதற்கு போலீசாருக்கு கடும் சிரமங்கள் ஏற்படுகிறது.
மலையில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் காய்ச்சுவதை கட்டுபடுத்துவது போலீசாருக்கு பெரும் சவலாக இருந்து வருகிறது.
மேலும் மலை கிராமங்களில் நடக்கும் திருவிழாக்கள், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு நீண்ட துாரம் மற்றும் போலீஸ் பற்றாக்குறையால் உரிய போலீஸ் பாதுகாப்பும் அளிக்க முடிவதில்லை. பணிச்சுமையால் போலீசார் கடும் சிரமப்படுகின்றனர்.
இதற்கிடையே காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் மலைவாழ் மக்களுக்கும் உடனடியாக தீர்வும் கிடைப்பதில்லை.
எனவே, மலைவாழ் மக்களின் சிரமத்தை போக்க கரியாலுார் காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து, சேராப்பட்டு பகுதியை தலைமையிடமாக கொண்டு புதிய காவல் நிலையம் அமைக்க காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு காவல் நிலையம் அமைக்கப்படும் பட்சத்தில், பெரும்பாலான மலைவாழ் கிராம மக்களுக்கு பயனாக அமையும்.