/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு கல்லுாரி மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க மைதானம் அமைக்கப்படுமா?
/
அரசு கல்லுாரி மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க மைதானம் அமைக்கப்படுமா?
அரசு கல்லுாரி மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க மைதானம் அமைக்கப்படுமா?
அரசு கல்லுாரி மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க மைதானம் அமைக்கப்படுமா?
ADDED : நவ 20, 2024 09:49 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் மாணவ மாணவிகளின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் பொருட்டு மைதானம் அமைத்து பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கடந்த 2011ம் ஆண்டு துவங்கப்பட்டது. இக்கல்லுாரி இளங்கலை மற்றும் முதுகலை முதுகலை பாடப் பிரிவுகளுடன் இயங்கி வருகிறது.
இங்கு சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், கச்சிராயபாளையம், கல்வராயன்மலை, எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
தற்போது சோமண்டார்குடி கோமுகி ஆற்றின் அருகே அரசு கல்லுாரி இயங்கி வருகிறது. கல்லுாரியில் படிக்கும் மாணவ மாணவிகள் பலர் பல்வேறு வகையான விளையாட்டுகளில் ஆர்வ மிகுதியுடன் உள்ளனர். ஆனால் முறையான விளையாட்டு மைதானம் இல்லாததால் போதிய பயிற்சி பெற முடியாத நிலை இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில், மாவட்டத்தின் பல்வேறு கல்லுாரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மாணவர்கள் தங்களது கிராமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயிற்சி பெறும் நிலையில், வாலிபால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
ஆனால், போதிய பயிற்சி இன்மையால் மாணவிகள் பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை இருந்தது. இதற்கிடையே முதல்வர் விளையாட்டு போட்டிகளில் அரசு கல்லுாரி மாணவிகள் பங்கேற்க செய்ய வேண்டும் என்று போட்டிகளை நடத்திய ஒருங்கிணைப்பு குழுவினர் கல்லுாரி நிர்வாகத்திடம் பலமுறை வற்புறுத்தினர்.
இதனையடுத்து வேறு வழியின்றி வாலிபால் உள்ளிட்ட சில குழு போட்டிகளுக்கு அரசு கல்லுாரி சார்பில் அணிகள் அனுப்பி வைக்கப்பட்டது.
முறையான பயிற்சி இன்றி, எப்படி விளையாட வேண்டும் என்பது கூட தெரியாமல் மற்ற கல்லுாரி மாணவிகள் முன்னிலையில் அரசு கல்லுாரி மாணவிகள் அணியினர் கூனி குறுகியதை காண முடிந்தது. மேலும் கல்லுாரியில் உடற்கல்வி துறை பேராசிரியரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் போதிய பயிற்சி அளிக்கவில்லை.
எனவே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் விளையாட்டு மைதானம் அமைத்து மாணவ மாணவிகளின் விருப்பதற்கேற்ப அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளுக்கும் முறையாக பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.