/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மடப்பட்டு வார சந்தையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா? நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் கோரிக்கை
/
மடப்பட்டு வார சந்தையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா? நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் கோரிக்கை
மடப்பட்டு வார சந்தையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா? நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் கோரிக்கை
மடப்பட்டு வார சந்தையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா? நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் கோரிக்கை
ADDED : அக் 08, 2025 12:06 AM

திருவெண்ணெய்நல்லுார்;; மடப்பட்டு வார சந்தையில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்துள்ள மடப்பட்டு சர்வீஸ் சாலை அருகில் ஞாயிற்று கிழமை வார சந்தை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடந்து வருகிறது. வாரந்தோறும் காலை 5:00 மணிக்கு சந்தை கூடும்.
இங்கு மடப்பட்டு,கருவேப்பிலைபாளையம், பெரியசேவலை, அரசூர் திருவெண்ணெய்நல்லுார் உள்ளிட்ட ஏராளமான கிராம மக்கள், ஆடு, மாடு, கோழி, காய்கறிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வருகின்றனர்.
சந்தையில் விற்பனை அதிகம் நடப்பதால் வெளியூர், வெளி மாவட்ட வியாபாரிகளும் அதிக அளவில் வருகின்றனர். இதனால், வார சந்தையில் ஞாயிறு தோறும் பல லட்சத்திற்கு விற்பனை நடக்கிறது. இது மட்டுமல்லாமல் தீபாவளி, ரம்ஜான், பக்ரீத் பண்டிகை நாட்களில் கோடிக்கணக்கில் ஆடுகள் விற்பனை நடக்கும்.
வியாபாரிகள் சந்தை நடக்கும் நாளுக்கு முந்தைய நாள் இரவு கால்நடைகளை மடப்பட்டு - பெரியசெவலை சாலையோரம் நிறுத்தி விடுகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
இதேபோன்று வெளியூர்களிலிருந்து காய்கறிகள், பழங்கள், கருவாடுகள் போன்ற பொருட்கள் விற்பனை செய்ய வருகின்ற வியாபாரிகள் சந்தையில் கட்டடம் ஏதும் இல்லாததால், திறந்தவெளியில் கூடாரம் அமைத்து விற்பனை செய்கின்றனர். மழைக்காலங்களில் பொருட்கள் நனைந்து வீணாகி நஷ்டத்திற்கு உள்ளாகின்றனர்.
மழைக்காலங்களில் மாடுகளை ஏற்றி வருகின்ற லாரி, டாட்டா ஏஸ் போன்ற வாகனங்கள் வந்து செல்லும்போது அப்பகுதி முழுவதும் சேரும், சகதியுமாக மாறிவிடுவதால் நிற்க கூட வழியில்லாமல் வியாபாரிகள் தவிக்கின்றனர். வார சந்தையில் சுத்தமான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி கிடையாது. வியாபாரிகள் சிறிது நேரம் அமர்ந்து ஓய்வு எடுக்க இடமும் இல்லை.
பாரம்பரியமான வார சந்தையில் வியாபாரிகளிடம் இருந்து வரி வசூலிப்பதில் மட்டுமே அக்கறை கொள்ளும் சந்தைதாரர்கள் சந்தை வளாகத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதில் அக்கறை செலுத்துவது இல்லை.
காலை துவங்கும் சந்தையில் கால்நடைகள் விற்பனை மதியத்துடன் முடிகிறது. சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால், இரவு வரை விற்பனை செய்ய முடியும். அதேசமயம் வெளியூர்களிருந்து அதிக மக்கள் வந்து செல்லும் வாய்ப்பும் ஏற்படும்.
எனவே தனியார் இடத்தில் இயங்கும் சந்தையை அரசுக்கு சொந்தமான இடத்திற்கு மாற்றி அமைத்து தனித்தனி கடைகள், வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டுமென வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.