தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நகர பகுதி கழிவுநீர் சித்தேரியில் கலப்பது... தடுக்கப்படுமா?நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நகர பகுதி கழிவுநீர் சித்தேரியில் கலப்பது... தடுக்கப்படுமா?நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நகர பகுதி கழிவுநீர் சித்தேரியில் கலப்பது... தடுக்கப்படுமா?நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


UPDATED : மே 18, 2026 11:16 PM

ADDED : மே 18, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2026 11:16 PM ADDED : மே 18, 2026 04:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சித்தேரியில் கழிவு நீர் கலப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டையும், நகர பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கும் அபாயத்தையும் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் உள்ள சித்தேரி 38 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி நீரை பயன்படுத்தி கடந்த காலங்களில் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்தனர்.

ஏரியின் நீர் வரத்து வாய்க்கால்கள், சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி ஆங்காங்கே நீர் வரத்து தடைபட்டுப் போனது. இதனால், ஏரி வறண்டு, விளாந்தாங்கல் சாலை உள்ளிட்ட நகர பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் அதில் கொட்டப்பட்டு ஏரி மாசடைந்துள்ளது.

இதனால், சித்தேரியின் சுற்றுப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால் நகர பகுதியின் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கும் அபாயம் உள்ளது. ஏரியை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை சுட்டிக்காட்டி 'தினமலர்' நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிட்டதன் பலனாக சில ஆண்டுகளுக்கு முன், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் முன்வந்து சித்தேரியில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றினர். தொடர்ந்து, ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டன.

ஆனால், உள்ளூரிலேயே உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாரும் இந்த ஏரியின் நிலை குறித்து எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை. இதனால் சீரமைக்கப்பட்ட சித்தேரி மீண்டும் கழிவுகள் கலந்து பழைய நிலைக்கு மாறத் துவங்கியுள்ளது.

ஏரி பராமரிப்பின்றி, நகர பகுதியின் கழிவுநீர் பெரும்பகுதி இந்த ஏரியில் வந்து தேங்குவதுடன், குப்பைகள் கொட்டுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் ஏரியின் நீர் பச்சை நிறத்தில் மாசடைந்து போய் விஷத்தன்மை கொண்டதாக மாறி உள்ளது.

மேலும் ஏரியில் நீர் நிரம்பியிருக்கும்போது, சமூக விரோதிகள் கரையை உடைத்து, அவ்வப்போது தண்ணீரை வெறியேற்றுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

அதேபோன்று வரத்து வாய்க்கால், நீர் வெளியேறும் வடிகால் அனைத்தும் அடைபட்டு, துார்ந்துபோயுள்ளது. ஏரியின் கரைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே மாவட்ட தலைநகரில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சித்தேரி ஏரியை துார்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us