அரசு கலை அறிவியல் கல்லுாரியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுமா ... கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை தேவை
அரசு கலை அறிவியல் கல்லுாரியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுமா ... கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை தேவை
ADDED : மே 28, 2026 04:39 AM

கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டு கோமுகி ஆற்றின் அருகே கடந்த 2022ம் ஆண்டு முதல் கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகின்றது. 14 வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள், 6 கழிவறைகள், 6 ஆசிரியர் அறைகள், நுாலகம், கருத்தரங்கு ஹால், முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கான அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் 3 தளங்களில் கல்லுாரி இயங்கி வருகிறது.
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கச்சிராயபாளையம், தியாகதுருகம், கல்வராயன்மலை உட்பட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இளங்கலை, முதுகலை வகுப்புகளில் பயின்று வருகின்றனர்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி, இயற்பியல், வேதியியல், வணிகவியல் என 7 வகுப்புகள் யு.ஜி., பிரிவில் உள்ளன. ஆங்கிலம், கணினி, கணிதம், வணிகவியல் என 4 வகுப்புகள் பி.ஜி., பிரிவில் உள்ளன. யு.ஜி., பிரிவில் 7 வகுப்புகளுக்கு தலா 3 வகுப்பறைகள் என்ற நிலையில் மொத்தம் 21 வகுப்பறைகள் தேவை. பி.ஜி. பிரிவில் 4 பிரிவுகளுக்கு தலா 2 வகுப்பறைகள் என்ற நிலையில் 8 என மொத்தம் 29 வகுப்பறைகள் தேவை. ஆனால் இங்கு 14 வகுப்பறைகள் தான் உள்ளன.
இதனால் ஒரே வகுப்பறையை இரண்டாக பிரித்து அதில் இரு வகுப்பு மாணவர்களையும் ஒன்றாக அமர வைத்து இட நெருக்கடியில் பாடம் நடத்தும் அவலம் இருந்து வருகிறது.
அத்துடன் கல்லுாரிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால், பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் கல்லுாரிக்கு வருவது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதனால் இங்கு மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
மாலை நேரங்களில் இக்கல்லுாரி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது.
மேலும் இங்கு 4 கழிப்பறைகள் மட்டும்தான் உள்ளன. இதனால் மாணவ, மாணவிகள் அவதியடைகின்றனர்.
எனவே மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கழிவறை அமைக்க வேண்டும்.
அத்துடன் இங்குள்ள ஒரேயொரு போர்வெல் மூலமாக சொற்ப அளவில் தண்ணீர் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே கூடுதல் கழிவறைகள், கூடுதலாக போர்வெல்கள் அமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் கல்லுாரிக்கு அருகிலேயே விவசாய நிலத்தினையொட்டி அமைக்கப்பட்டுள்ள மாணவர் விடுதிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் இங்கு தங்கியுள்ள மாணவிகள் இரவு நேரங்களில் எவ்வித பாதுகாப்புமின்றி கடுமையான அச்சத்துடன் தங்கி வரும் நிலை நீடிக்கிறது.
கள்ளக்குறிச்சி அரசு கலை-அறிவியல் கல்லுாரியின் மாணவர்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு மாவட்ட கலெக்டர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
