கல்வராயன்மலையில் கோடை விழா... நடத்தப்படுமா? மாவட்ட மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பு
கல்வராயன்மலையில் கோடை விழா... நடத்தப்படுமா? மாவட்ட மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பு
UPDATED : மே 11, 2026 06:59 PM
ADDED : மே 11, 2026 06:51 PM

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தின் முக்கிய நிகழ்வான கோடை விழா கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படாத நிலையில், மீண்டும் நடத்த முன்வர வேண்டும் என மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட மேற்கு எல்லையில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் கல்வராயன்மலை அமைந்துள்ளது.
இங்குள்ள கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 15 ஊராட்சிகளில் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மலைவாழ் மக்கள் விவசாயம் மட்டுமின்றி கால்வடை வளர்ப்பு, தேன் எடுத்தல், கடுக்காய் சேகரித்தல் ஆகிய தொழில்களையும் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
இருப்பினும் போதிய வருமானம் இன்மையால், பெரும்பாலான மலைவாழ் மக்கள் வெளிமாநிலத்திற்கு கூலி வேலைக்குச் செல்கின்றனர். இங்குள்ள மக்களின் பொருளாதார நிலை மற்றும் அறியாமையைக் கொண்டு செம்மரம் வெட்டுதல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு சமூக விரோத கும்பல்கள் ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால் பலரது வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியுள்ளது.
கல்வராயன்மலைப் பகுதியில் மேகம், பெரியார், கவியம் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள், படகுசவாரி, பூங்கா ஆகியவை இருப்பதால் சுற்றுலா தலமாகவும் உள்ளது. மலைக்கு மெருகூட்டும் வகையில் மலை அடிவாரத்தில் கோமுகி அணை அமைந்துள்ளது.
தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் 2 நாட்கள் வெகுவிமர்சையாக கோடை விழா நடத்துவது வழக்கமாகும். விழாவில் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு துறைகளின் சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும். எவ்வித அலைச்சலுமின்றி பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிடைத்து வந்ததால் மிகுந்த மகிழ்ச்சியடைவர்.
விழாவை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதி மக்கள் கண்டுகளிப்பர். அதிகளவிலான பொதுமக்கள் வருகையால் மலை பகுதியிலுள்ள நீர் வீழ்ச்சி, பூங்கா, படகு சவாரி இடங்கள் மேம்படுத்தப்பட்டது. விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது, மாவட்டத்தின் முக்கிய நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா நடத்தப்பட்டு வந்தது.
கோடை விழாவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். வனத்துறை, சுற்றுலாத் துறை அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் உட்பட அனைத்து துறை அரசு அதிகாரிகள் பங்கேற்பர். அரசு துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த பல்துறை கண்காட்சி அரங்குகள் அமைத்து திட்டங்கள் மூலம் பயன்பெறுவது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் முதல் செயல்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020- 2021ம் ஆண்டு கோடை விழா நடத்த முடியாமல் போனது.
அதன்பின் தி.மு.க., ஆட்சியில் கோடை விழா நடத்தப்படுமா என்று மலைவாழ் மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் கோடை விழாவை நடத்த ஆட்சியாளர்கள் முன்வரவில்லை.
மாவட்டத்தின் முக்கிய நிகழ்வாக இருந்த கோடை விழா தற்போது முற்றிலும் கைவிடப்பட்டு இருப்பது பொதுமக்களை கடும் அதிருப்தியடையச் செய்திருக்கிறது.
தற்போது புதியதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க., ஆட்சியிலாவது கோடை விழா நடத்துவதற்கு முன்வர வேண்டும் என்பது மாவட்ட மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
