கல்வராயன்மலை வாழ் மக்களின் வாழ்வாதாரம்... மேம்படுத்தப்படுமா?பொறுப்பு அமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கல்வராயன்மலை வாழ் மக்களின் வாழ்வாதாரம்... மேம்படுத்தப்படுமா?பொறுப்பு அமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
UPDATED : ஜூலை 09, 2026 06:01 PM
ADDED : ஜூலை 09, 2026 05:50 PM

கச்சிராயபாளையம்: கல்வராயன்மலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பொறுப்பு அமைச்சருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்வராயன்மலை ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளில் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு, தேன் சேகரித்தல் போன்ற மலை சார்ந்த சிறு தொழில்களையே நம்பியுள்ளனர். இதில் போதிய வருமானம் கிடைப்பதில்லை.
இதனால் தங்களின் வாழ்வாதார தேவைக்காக கர்நாடக மாநிலம், மைசூர், மாண்டியா போன்ற இடங்களுக்கு மிளகு பறித்தல், மரம் வெட்டுதல் போன்ற எஸ்டேட் பணிகளுக்கும், சென்னை, கோயம்புத்துார் போன்ற பெரு நகரங்களுக்கு கட்டட பணிக்கும், கேரளா மாநிலத்திற்கு செங்கல் சூளை பணிகளுக்கும் சென்று அங்கேயே பல மாதங்கள் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.
இவர்களின் பண தேவையை அறிந்து கொண்ட சிலர் இப்பகுதி மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை சாராயம் காய்ச்சுதல், கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
இதே போல் இப்பகுதியைச் சேர்ந்த ஆண்களை ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்டுதல், கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர். செம்மரம் கடத்தலின் போது அம்மாநில போலீசார் சிறை பிடிப்பது அவ்வப்போது நடைபெறும். மேலும், துப்பாக்கி சூட்டிலும் இறந்துள்ளனர். பலர் நோய்வாய்பட்டு ஆந்திர மாநில காடுகளிலேயே இறந்து போன சம்பவங்களும் நடந்துள்ளது.
கல்வராயன்மலை பகுதி மக்களின் பொருளாதாரம் இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இப்பகுதிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சுய தொழில் துவங்குதல், கறவை மாடு வழங்கல், ஆடு, கோழி வளர்த்தல், பட்டுப்பூச்சி வளர்த்தல் போன்றவைகளுக்கு அரசு சார்பில் மானியம் வழங்கி வருகிறது.
ஆனால், அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் நலத்திட்ட பணிகள் முறையாக தகுதியுள்ளவர்களுக்கு சென்றடைவதில்லை.
இப்பகுதியில் கடுக்காய் மற்றும் மரவள்ளி அதிகளவில் விளைகிறது. இதனால் கடுக்காய் மற்றும் சேகோ தொழிற்சாலைகள் அமைத்தால் அப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் சூழல் உருவாகும்.
மேலும், இங்கு காய்கறிகள், பழங்கள், மிளகு, காபி போன்ற மதிப்பு மிக்க விவசாய பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு விவசாயிகளுக்கு தண்ணீர் தேவை அதிகரித்து வருகிறது. பல விவசாயிகள் ஆறுகள் மற்றும் ஓடைகளில் பம்ப் செட் அமைத்து தங்களின் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
அரசு மானியத்தில் போர்வெல் மற்றும் திறந்த வெளி கிணறு அமைக்கவும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டால் கல்வராயன்மலை பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் கல்வராயன் மலையில் கோடை விழா நடத்தப்பட்டு வந்தது. விழாவின் போது அரசின் பல்வேறு துறைகள் சார்பில் பல கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக இங்கு கோடை விழா நடத்துவது நிறுத்தப்பட்டது. 7 ஆண்டுகளாக கோடை விழா நடத்தப்படவில்லை. பொறுப்பு அமைச்சர் வன்னி அரசு இந்த ஆண்டு கல்வராயன் மலையில் கோடை விழா நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அளவிலான மருத்துவ சேவை மட்டுமே உள்ளது. மேல் சிகிச்சை பெற நகர் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
மேல்சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனை கல்வராயன் மலையில் அமைக்க வேண்டும். தேசிய அளவில் விளையாட்டு பயிற்சி மையம் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்த பயிற்சி மைதானம் கல்வராயன்மலையில் துவங்கப்பட்டால் இப்பகுதி இளைஞர்கள் பலர் பயன்பெறுவர். மேலும் பொது மக்களின் நீண்டநாள் எதிர்பார்பாக உள்ள கல்வராயன் மலையை சுற்றுலா தலமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கல்வராயன்மலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பொறுப்பு அமைச்சர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
