தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/சாத்தனுார் அணையை துார்வாரி நீர் கொள்ளளவு...உயர்த்தப்படுமா? கள்ளக்குறிச்சி, விழுப்புரம் விவசாயிகள் கோரிக்கை

சாத்தனுார் அணையை துார்வாரி நீர் கொள்ளளவு...உயர்த்தப்படுமா? கள்ளக்குறிச்சி, விழுப்புரம் விவசாயிகள் கோரிக்கை

சாத்தனுார் அணையை துார்வாரி நீர் கொள்ளளவு...உயர்த்தப்படுமா? கள்ளக்குறிச்சி, விழுப்புரம் விவசாயிகள் கோரிக்கை


UPDATED : மே 21, 2026 07:07 PM

ADDED : மே 21, 2026 05:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2026 07:07 PM ADDED : மே 21, 2026 05:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-: சாத்தனுார் அணையில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வரும் நிலையில் அணையை துார் வாரி, நீர் இருப்பின் அளவை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலம், சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திமலையில் உருவாகிறது. அங்கிருந்து 'தட்சிண பினாகினி' பெயருடன் கர்நாடகம் வழியாக தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களைக் கடந்து கடலுாரில் வங்கக் கடலில் கலக்கிறது.

இதன் குறுக்கே தமிழக எல்லையில் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி, சாத்தனுார் அணைகள் உள்ளது. குறிப்பாக சாத்தனுார் அணையின் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மற்றும் புதுச்சேரி மாநில விவசாயிகள் பயனடைகின்றனர். விவசாயத்திற்கு மட்டுமல்லாது, இம்மாவட்டங்களில் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.

முக்கியத்துவம் வாய்ந்த சாத்தனுார் அணை 119 அடி உயரமும், 8,100 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது. அணையை துார்வாரி பராமரிக்காததால் 1982ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கொள்ளளவு மறு ஆய்வின்படி வண்டல் மண் படிந்து 779 கன அடி அளவு மண் குவிந்து நீர் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக 7,321 மில்லியன் கன அடியாக நீர் இருப்பாக குறைந்தது என என கணக்கிடப்பட்டது.

கடந்த 2004ம் ஆண்டு மீண்டும் மறு ஆய்வு செய்தபோது மேலும் மண் துார்ந்து 500 மில்லியன் கன அடி நீர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தோராயமாக கணக்கிடப்பட்டது. அந்த வகையில் மொத்த கொள்ளளவான 8,100 மில்லியன் கன அடியில் 1.279 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருப்பதாக கணக்கிடப்பட்டது.

இருப்பினும் தற்போது வரை 7,321 மில்லியன் கன அடி நீர் இருப்பு என நீர்வளத்துறை கணக்கிட்டு வருகிறது.

நேற்றைய நிலவரப்படி 78 அடி அதாவது 1,357 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இவை திருவண்ணாமலை நகராட்சி, தானிப்பாடி, செங்கம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும், அணையின் பூங்கா பராமரிப்பு மற்றும் மீன் வளப்புக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்கின்றனர் அணை பராமரிப்பு அதிகாரிகள்.

தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றி துார்வாரும் திட்டத்தை நீர்வளத்துறை மேற்கொள்ளாததால் மழைக்காலங்களில் கூடுதலாக கிடைக்கும் தண்ணீரை அணையில் தேக்கி வைக்க முடியாமல் வெளியேற்றப்படுகிறது.

இதனால் வறட்சி காலங்களில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மற்றும் புதுச்சேரி விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கும் சூழல் ஏற்படுகிறது.

நீர் இழப்பு மற்றும் பாதிப்புகளை சீர் செய்ய நீர்வளத்துறை போர்க்கால நடவடிக்கை மூலம் சாத்தனுார் அணையை துார்வாரி சீரமைக்க வேண்டும். இதன் மூலம் மழைக் காலங்களில் அணையில் இழப்பு ஏற்பட்டிருக்கும் 1,279 மில்லியன் கன அடி நீரை கூடுதலாக சேமிக்க முடியும் என்கின்றனர் விபரம் அறிந்த விவசாயிகள்.

எனவே, அணையை இந்த கோடை காலத்திற்குள்ளாக துார்வார வேண்டும். அதன் மூலம் நீர் இழப்பை சரி செய்து நான்கு மாவட்ட விவசாயிகள் பயனடைய புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த அணையின் மூலம் பயனடையும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு பாசன வசதி பெரும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us