கல்வராயன்மலையில் கூடுதல் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படுமா?: பணிச்சுமை அதிகரிப்பால் போலீசார் கடும் அவதி
கல்வராயன்மலையில் கூடுதல் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படுமா?: பணிச்சுமை அதிகரிப்பால் போலீசார் கடும் அவதி
UPDATED : ஜூன் 19, 2026 05:10 PM
ADDED : ஜூன் 18, 2026 03:20 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலையில் போலீசாருக்கு பணிச்சுமை அதிகரிப்பால் கூடுதலாக புதிய போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்க காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த 2019ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் மற்றும் அரசு துறையின் பல்வேறு மாவட்ட அலுவலங்கள் செயல்படுகிறது. காவல் துறையில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய மூன்று டி.எஸ்.பி., அலுவலகம், 19 சட்டம் ஒழுங்கு மற்றும் அனைத்து மகளிர், போக்குவரத்து, மதுவிலக்கு அமல்பிரிவு என தலா 3 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளது.
இதில் கள்ளக்குறிச்சி ஸ்டேஷனில் ஒரு இன்ஸ்பெக்டர், 5 சப் இன்ஸ்பெக்டர்கள் 73 போலீசார் என மொத்தம் 79 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி நகரம் (21 வார்டுகள்), சுற்று வட்டாரத்தில் 24 கிராமங்கள் ஸ்டேஷன் கட்டுபாட்டில் உள்ளது. இங்குள்ள போலீசார் மாவட்ட காவல் துறை அலுவலத்தில் அயல் பணி, கோர்ட் பணி, சம்மன் கொடுக்கும் பணி, அரசு மருத்துவமனை பாதுகாப்பு, விபத்து சான்று வாங்கும் பணிக்கு பலர் சென்று விடுகின்றனர். ஒரு சிலர் விடுமுறையில் செல்கின்றனர்.
மேலும் மாவட்டம் உதயத்திற்கு பின் வாரந்தோறும் குறைகேட்பு கூட்டம், ஆர்ப்பாட்டம், முற்றுகை, மறியல், விழிப்புணர்வு ஊர்வலம், பொதுக்கூட்டம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. மாவட்ட அரசு உயர் அதிகாரிகள் அவ்வப்போது வந்து செல்கின்றனர். இவவை அனைத்திற்கும் கள்ளக்குறிச்சி ஸ்டேஷன் போலீசார் மட்டுமே பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
ஸ்டேஷனில் போலீஸ் பற்றாக்குறையால் வழக்குகளை விரைந்து விசாரிக்கவும், குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பணி சுமைகள் அதிகரிப்பால் கிராமங்களை உள்ளடக்கி புதிய தாலுகா போலீஸ் ஸ்டேஷன் உருவாக்க வேண்டும்.
அதேபோல், கல்வராயன்மலை ஒன்றியத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். மலையில் உள்ள கரியாலுார் ஸ்டேஷன் கட்டுபாட்டில் 13 ஊராட்சிகளுக்குட்பட்ட 142 கிராமங்கள் உள்ளன. ஒரு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உட்பட 15 போலீசார் பணியில் உள்ளனர். போலீஸ் ஸ்டேஷன் எல்லை, சுற்று வட்டார பரப்பளவில் 70 கி.மீ., துாரத்தில் முடிவடைகிறது.
மலைவாழ் மக்கள் புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் செல்ல வேண்டுமானால் கடும் சிரமப்படுகின்றனர். புகார் தொடர்பாக போலீசாரும் உடனடியாக சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொள்ள முடிவதில்லை. குறிப்பாக இரவு நேரங்களில் விசாரணைக்கோ அல்லது ரோந்து பணிக்கோ செல்ல முடியாத நிலை உள்ளது.
மலையில் பல இடங்களில், கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. திருவிழா, ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க முடிவதில்லை. கரியாலுார் ஸ்டேஷனை இரண்டாக பிரித்து வஞ்சிக்குழி, கிளாக்காடு, இன்னாடு உள்ளிட்ட சுற்று வட்டார ஊராட்சிகளின் 60க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்டு சேராப்பட்டு பகுதியை தலைமையிடமாக கொண்டு புதிய போலீஸ் ஸ்டேஷன் உருவாக்க வேண்டும்.
மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சேராப்பட்டு உட்பட தேவையான இடங்களில் புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைப்பதற்கு காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
