தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தடுக்கப்படுமா?

தடுக்கப்படுமா?

தடுக்கப்படுமா?


ADDED : செப் 09, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தென்பெண்ணை ஆற்றில் ஏற்படும் திடீர் வெள்ள சேதம்... துறிஞ்சலாற்றை பொதுப்பணித்துறை கண்டுகொள்ளுமா?

திருக்கோவிலுார்: தென்பெண்ணை ஆற்றில் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் வெள்ளத்தை கண்காணித்து சேதத்தை தடுக்க நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர். தமிழகத்தின் மிக முக்கிய நதிகளில் ஒன்று தென்பெண்ணை. கர்நாடக மாநிலம், நந்தி துர்க்கா மலையில் உருவாகி, 430 கிலோமீட்டர் பயணித்து, கடலுார் வங்க கடலில் கலக்கிறது. தமிழக எல்லையில் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி, சாத்தனுார் அணையை கடந்துவிட்டால் அதன் பிறகு திருக்கோவிலுார் , எல்லீஸ், சொர்ணாவூர் என சிறு சிறு தடுப்பணைகளை தாண்டி நேராக கடலுாரில் வங்க கடலில் கலந்துவிடும்.

கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெஞ்சல் புயல் வெள்ளப் பெருக்கில் தென்பெண்ணை ஆற்றில் குறிப்பாக சாத்தனூர் அணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. அணையின் கீழ் பகுதியில், கல்வராயன் மலையில் இருந்து உருவெடுக்கும் முஷ்குந்தாநதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உருவெடுக்கும் துரிஞ்சலாறு உள்ளிட்ட பல கிளை நதிகளில் இருந்து தண்ணீர் வந்து சேர்ந்தது. இதன் காரணமாக திருக்கோவிலுார் அணைக்கட்டை வினாடிக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான கன அடி நீர் கடந்து சென்றது. இதேபோல் கடந்த 2022 ம் ஆண்டிலும் தென்பெண்ணையில் வெள்ளம் ஏற்பட்டு, துறிஞ்சலாறு சங்கமிக்கும் இடமான மணம்பூண்டி, தேவனுார்,, அரகண்டநல்லுார் என பல ஊர்களில் வெள்ளம் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

தொடர்கதையாக நீடிக்கும் இப் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருப்பது துறிஞ்சலாறு. திருவண்ணாமலை மாவட்டம் கமுதி மலையில் உருவெடுத்து வனப்பகுதி தண்ணீர் முழுவதும் இந்த துறிஞ்சலாற்றின் வழியாக பெருக்கெடுத்து நல்லம்பிள்ளைபேட்டை, வேளானந்தல், கோணலுார், கெங்குபட்டு, தண்டரை (செக் டேம்), வாளவெட்டி, விழுப்புரம் மாவட்டம் வசந்தகிருஷ்ணாபுரம், கொடுக்கப்பட்டு மற்றும் கோட்டமருதுாரை கடந்து 40 கிலோமீட்டர் பயணித்து மணம்பூண்டியில் தென்பெண்ணையாற்றில் சங்கமிக்கிறது.

துறிஞ்சலாற்றை நீர்வளத்துறையோ, பொதுப்பணி துரியோ இதுவரை முறையாக பராமரிக்கவில்லை. காட்டாற்று பாதையாகவே இருந்து வருகிறது. ஆற்றில் குறுக்கே குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் தண்ணீரைத் தேக்கும் வகையில் எங்கும் அணை இல்லை. சிறு சிறு தடுப்புகள் மட்டுமே உள்ளது. எனவே இந்த நதியில் வரும் தண்ணீரின் அளவை கணக்கிடும் அளவுகோலையும் நீர்வளத் துறை பராமரிக்கவில்லை.

இதுவரை எந்த அரசும் இப்படி ஒரு நதி இருக்கிறது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளாததால், ஆற்றை ஒட்டி நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், ஆக்கிரமித்து பயிர் செய்ய துவங்கி விட்டனர். இதனால் ஆறு குறுகிவிட்டது. அதேபோல் மணம்பூண்டியில் துறிஞ்சலாறு சங்கமிக்கும் இடமும் ஆக்கிரமிக்கப்பட்டதால் நேராக தண்ணீர் ஆற்றில் கலக்க முடியாமல் ஊருக்குள் புகுந்து அரகண்டநல்லுாரை புரட்டிப் போடுவது தொடர்கிறது.

தற்பொழுது சாத்தனுார் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை மட்டுமே நீர்வளத்துறை வெளியிடுகிறது. இந்த தண்ணீர் திருக்கோவிலுார் அணைக்கட்டை வந்தடையும் போது கிளை நதிகளில் இருந்து வரும் தண்ணீரும் சேர்ந்து அதன் அளவு அபரிமிதமானதாக மாறிவிடுகிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத கரையோரம் உள்ள மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.

எனவே கிளை நதிகளில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் தண்ணீரின் அளவை கண்காணித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்க நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது. திருக்கோவிலுார் அணைக்கட்டில் இருந்து பிரியும் பம்பை வாய்க்காலை அகலப்படுத்தி மேம்படுத்துவதன் மூலம், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாதானுார் ரெகுலேட்டர் வழியாக தண்ணீரை திருப்பி பொய்யப்பாக்கம் ஏரியை விரிவுபடுத்தி தண்ணீரை சேமிக்க முடியும்.

அங்கிருந்து வறட்சி காலங்களில் சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருக்கோவிலுார் அணைக்கட்டில் இருந்து பிரியும் மலட்டாற்றை மேம்படுத்துவது, தென்பெண்ணை ஆற்றையும், கெடிலம் நதியும் இணைப்பதன் மூலம் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் தென்பெண்ணை ஆற்றில் சாத்திய கூறுகள் உள்ள இடங்களை ஆய்வு செய்து, தடுப்பணைகளை உருவாக்குவதால் வீணாக தண்ணீர் கடலில் கலப்பதை தடுக்கலாம். இதன் மூலம் பாசன வசதி பெறும் நிலங்களின் பரப்பளவை அதிகரிக்க முடியும். அபரிமிதமான வெள்ளத்தை கட்டுப்படுத்தி வெள்ளம் ஊருக்குள் புகுவதை தடுக்கலாம் இதற்கெல்லாம் விரிவான ஆய்வு அவசர அவசியமாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us