திருக்கோவிலுார் - விழுப்புரம் 4 வழிச்சாலையாக மாற்றப்படுமா?பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
திருக்கோவிலுார் - விழுப்புரம் 4 வழிச்சாலையாக மாற்றப்படுமா?பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
UPDATED : செப் 15, 2026 04:58 PM
ADDED : செப் 15, 2026 04:41 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றி, தேவையான இடங்களில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்கோவிலுாரில் இருந்து முகையூர், ஆயந்துார் வழியாக விழுப்புரம் செல்லும் சாலை 37 கி.மீ., துாரம் உள்ளது. இதில் திருக்கோவிலுாரிலிருந்து அரகண்டநல்லுாரைக் கடப்பதற்கே 30 நிமிடம் வரை ஆகிறது. அப்படியே கடந்தாலும் அரகண்டநல்லுார் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள் செல்ல 30 நிமிடத்திற்கும் மேலாகிறது.
இது மட்டுமல்ல அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு சீசன் நாட்களில் விவசாயிகளின் விளை பொருட்களை ஏற்றி வரும் டிராக்டர்கள், லாரிகளால் மாலை 6:00 மணியிலிருந்து காலை 6:00 மணி வரை கேட்கவே வேண்டாம்.
அதையும் கடந்தால் ஆங்காங்கே ஸ்பீடு பிரேக், அதிக வளைவுகள். முகையூர், ஆயந்துார், மாம்பழப்பட்டு ஊர் பகுதிகளில் மிகக் குறுகலான சாலையைக் கடப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
திருக்கோவிலுார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் போது, பெரும்பாலும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்குச் செல்ல தினசரி 20க்கும் மேற்பட்ட 108 மற்றும் ஏராளமான தனியார் ஆம்புலன்ஸ்களும் இச்சாலையில் பயணிக்கின்றன.
மணலுார்பேட்டை, மூங்கில்துறைபட்டு, சங்கராபுரம் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராமத்தினர் விழுப்புரம், சென்னை செல்வதற்கு முக்கிய வழித்தடமாகவும் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.
மிக முக்கியமான இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்றால் அரகண்டநல்லுாரில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும்.
அதற்கு அரகண்டநல்லுார் அரசு மாணவர் விடுதியில் இருந்து நேராக வேட்டவலம் சாலையில், தேவனுார் வழியாக புறவழிச் சாலையை அமைக்க வேண்டும். இது நாயனுாரில் சிறு தொழில் முன்னேற்ற கழகம் (சிட்கோ) அமைய உள்ள இடத்திற்கும் போக்குவரத்து வசதியை மேம்படுத்தியதாக இருக்கும். முக்கியமாக திருக்கோவிலுாரில் இருந்து விழுப்புரம் வரை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்த வேண்டும்.
கடந்த ஆட்சியில் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலைகளை முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அப்போது இச்சாலையை நெடுஞ்சாலைத்துறை கண்டு கொள்ளவே இல்லை. கடந்த சட்டசபைத் தேர்தலில் திருக்கோவிலுார் தொகுதியில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளுமே இவ்வழித்தடத்தை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்தனர்.
அதற்கேற்ப வெற்றி பெற்ற அ.தி.மு.க., வேட்பாளர் பழனிசாமி நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அரசும் பரிசீலிக்கும் என பதில் அளித்திருந்தது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் முக்கிய வழித்தடமாக இருக்கும் இதனை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் காத்திருக்கின்றனர்.
