/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளிகளில் 'நீட்' பயிற்சி மையங்கள் விரிவுபடுத்தப்படுமா? வாய்ப்பின்றி தவிக்கும் கிராமப்புற மாணவர்கள்
/
அரசு பள்ளிகளில் 'நீட்' பயிற்சி மையங்கள் விரிவுபடுத்தப்படுமா? வாய்ப்பின்றி தவிக்கும் கிராமப்புற மாணவர்கள்
அரசு பள்ளிகளில் 'நீட்' பயிற்சி மையங்கள் விரிவுபடுத்தப்படுமா? வாய்ப்பின்றி தவிக்கும் கிராமப்புற மாணவர்கள்
அரசு பள்ளிகளில் 'நீட்' பயிற்சி மையங்கள் விரிவுபடுத்தப்படுமா? வாய்ப்பின்றி தவிக்கும் கிராமப்புற மாணவர்கள்
ADDED : ஜூலை 31, 2025 11:11 PM

அரசு பள்ளி மாணவர்களுக்கான'நீட்' பயிற்சி திட்டத்தை விரிவுபடுத்தி திறமையான ஆசிரியர் குழுவைநியமனம் செய்து கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லுாரிகளில் ஆண்டுதோறும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இதை செயல்படுத்தியுள்ளது.
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தனியாக 'நீட்' பயிற்சி அளிக்கப்படுகிறது.
இங்கு, 'நீட்' பயிற்சி அளிப்பதற்கென நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு இணையாக உள்ளதால் தேர்வை கையாள்வது எளிதாக இருப்பதாக அம்மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளி மாணவர்களே அரசு மருத்துவக் கல்லுாரியில் தகுதி அடிப்படையில் அதிக இடம் பிடிக்கின்றனர்.
அரசு பள்ளியில் நடைமுறையில் உள்ள பாடத்திட்டம் 'நீட்' தேர்வுக்கு இணையாக இன்னும் மேம்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர்களிடையே உள்ளது.
சில ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்களை 'நீட்' தேர்வுக்கு தயார்படுத்துவதில் ஆசிரியர்களும் சிறப்பு கவனம் செலுத்துவதில்லை என பெற்றோர்கள் தரப்பில் ஆதங்கம் உள்ளது.
இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட பின்னரே அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு ஓரளவு நிறைவேறி வருகிறது.
இந்த ஆண்டு திருக்கோவிலுார் அடுத்த ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் திருமூர்த்தி 'நீட்' தேர்வில் 572 மதிப்பெண் பெற்று 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின்படி மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
அதேபோல் தியாக துருகம் அடுத்த எஸ்.ஒகையூர் மாணவி மதுமிதா 551 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3ம் இடம் பிடித்தார்.
இந்த இரு மாணவர்களும் மாவட்ட மாதிரி பள்ளியில் படித்தவர்கள். இவர்களின் வெற்றி இந்த ஆண்டு 'நீட்' தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளது.
அதே நேரத்தில் மாதிரி பள்ளியில் படித்தால் மட்டுமே 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியுமா என்ற கேள்வியும் மாணவர்களிடையே எழுந்துள்ளது. தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கும் இது போன்ற அச்சத்திலிருந்து தெளிவுபடுத்தி வழிகாட்டுவது அவசியமாகிறது.
கடந்த 2023 - 2024 கல்வியாண்டில் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், தியாகதுருகம் ஆகிய 5 அரசு பள்ளிகளில் 'நீட்' பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.
கடந்தாண்டு நீட் தேர்வு எழுதுவதில் மாணவரிடம் ஆர்வம் குறைந்ததால் பயிற்சி வகுப்புகளுக்கு ஒரு சிலரே வந்ததால் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மட்டும் 'நீட்' பயிற்சி நடத்தப்பட்டது.
இதனால் பல்வேறு கிராமங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் நீண்ட தொலைவு பயணம் செய்து கள்ளக்குறிச்சி வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இதன் காரணமாக இந்த ஆண்டு கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், சங்கராபுரம் ஆகிய 3 இடங்களில் 'நீட்' தேர்வுக்கான பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் மாவட்டம் முழுதும் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் அரசுப் பள்ளியில் 'நீட்' பயிற்சி வகுப்பு நடத்த கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதேபோல் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கவும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக பயிற்சி, கையேடு மற்றும் வழிகாட்டுதலையும் அளிக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து செய்தால் வாய்ப்பு கிடைக்காமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பல திறமையான மாணவர்கள் மருத்துவராக உருவாக்க முடியும்.
-நமது நிருபர்- இதைத் தொடர்ந்து செய்தால் வாய்ப்பு கிடைக்காமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பல திறமையான மாணவர்கள் மருத்துவராக உருவாக்க முடியும்.