/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊராட்சிகளில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?
/
ஊராட்சிகளில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?
ADDED : ஜூலை 30, 2025 11:32 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானம் அமைக்க இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2006 - 2011ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போது, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளில், அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது.
ஊராட்சிகளில் காலியாக உள்ள பொது இடத்தை சுத்தம் செய்து, அங்கு உடற்பயிற்சி உபகரணம், ஊஞ்சல், சறுக்கு மரம் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களுடன், விளையாட்டு மைதானம் அமைத்தனர்.
கிராமங்களில் வசிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் விடுமுறை நாட்களில் விளையாட்டு மைதானத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்து வந்தனர்.
இந்த உபகரணங்களை பராமரிக்க ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நாளடைவில் முறையான பராமரிப்பு இன்றி, மைதானத்தில் நடப்பட்ட இரும்பு பொருட்கள் அனைத்தும் துரு பிடித்து மக்கியது. காலப்போக்கில் விளையாட்டு உபகரண பொருட்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டது.
கிராமப்புறங்களில் பெரும் வரவேற்பை பெற்ற இத்திட்டம், தற்போது நடைமுறையில் இல்லை. எனவே, கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி அனைத்து ஊராட்சிகளிலும் மீண்டும் விளையாட்டு மைதானம் உருவாக்கி, அங்கு உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.