/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் மாவட்ட நுாலகம்... கட்டப்படுமா? நிதி ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகிறது
/
கள்ளக்குறிச்சியில் மாவட்ட நுாலகம்... கட்டப்படுமா? நிதி ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகிறது
கள்ளக்குறிச்சியில் மாவட்ட நுாலகம்... கட்டப்படுமா? நிதி ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகிறது
கள்ளக்குறிச்சியில் மாவட்ட நுாலகம்... கட்டப்படுமா? நிதி ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகிறது
ADDED : செப் 25, 2024 06:49 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட நுாலகத்திற்காக 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பல ஆண்டுகளாகியும், இடம் தேர்வு செய்யப்படாததால் கள்ளக்குறிச்சி மக்களின் மாவட்ட நுாலக கனவு கானல் நீராகவே இருந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 2 வருவாய் கோட்டங்கள், 7 தாலுகாக்கள், 562 வருவாய் கிராமங்கள், 3 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 9 வட்டாரங்கள் மற்றும் 412 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் தொகை கொண்ட கள்ளக்குறிச்சியில் கடந்த 1957ம் ஆண்டு நுாலகம் திறக்கப்பட்டது.
கடந்த 67 ஆண்டுகளாகவே தனியார் கட்டடத்தில் கள்ளக்குறிச்சி நுாலகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நுாலகத்தை தரம் உயர்த்தி, சொந்த கட்டடம் கட்ட பணிகளை துவங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
அதைதொடர்ந்து நுாலகம் கட்டுவதற்காக கடந்த 2014ம் ஆண்டு அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே 15 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த இடம் போதுமானதாக இல்லாததால் பணிகள் எதுவும் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டது.
ஆனால் கடந்த 2019-ல் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தனியாக பிரித்து புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
புதிதாக துவக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக கட்டடத்தின் வடிவமைப்பில் 6 மாடிகளுடன் மாவட்ட நுாலகம் கட்டுவதற்கு நுாலக துறை சார்பில் தலா ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நுாலகம் கட்டுவதற்காக கால்நடை பராமரிப்புத்துறை வளாகம் மற்றும் வெவ்வேறு இடங்களை பார்வையிட்டு, அவ்வப்போது கலெக்டர்கள் முயற்சி செய்தபோதிலும் கள்ளக்குறிச்சி நகர பகுதியில் 5 கி.மீ., சுற்று பகுதிக்குள், 30 சென்ட் இடம் கிடைக்கவில்லை.
இதனால் பணிகள் துவங்காமல் மாவட்ட நுாலக திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும், நுாலகம் கட்டுவதற்கான இடம் கிடைக்காததால், கள்ளக்குறிச்சி மக்களின் நுாலக கனவு கொஞ்சமும் முன்னேற்றமின்றி கானல் நீராகவே இருந்து வருகிறது.
ஏற்கனவே, நுாலகம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்துடன் தனியார் பங்களிப்பையும் இணைத்து கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்து அதே இடத்தில் புதிதாக மாவட்ட நுாலக கட்டடம் கட்டுவதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என, இப்பகுதி கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.