/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் மாட வீதிகளில் ஆக்கிரமிப்பு... அகற்றப்படுமா?; போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி
/
திருக்கோவிலுார் மாட வீதிகளில் ஆக்கிரமிப்பு... அகற்றப்படுமா?; போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி
திருக்கோவிலுார் மாட வீதிகளில் ஆக்கிரமிப்பு... அகற்றப்படுமா?; போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி
திருக்கோவிலுார் மாட வீதிகளில் ஆக்கிரமிப்பு... அகற்றப்படுமா?; போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி
ADDED : ஆக 10, 2025 11:33 PM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் பெருகியுள்ள ஆக்கிரமிப்புகளால், பக்தர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
திருக்கோவிலுார் விஸ்தாரமான தெருக்களுடன் நான்குமாட வீதியைக் கொண்டது. மேலும் பறந்து விரிந்த சன்னதி வீதி, மார்க்கெட் வீதியும் உண்டு. ஆனால் இன்று கடைகள், வீடுகள் என நிரந்தர ஆக்கிரமிப்புகள் நகரை கபலீகரம் செய்து கொண்டிருக்கிறது. தெற்கு வீதியில், தெப்பக்குளத்திற்கு செல்லும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான நிலவரைக் கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியதால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு குளம் வற்றி கிடக்கிறது.
முதல் ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்றான உலகளந்த பெருமாள் கோவில் அமைந்துள்ள சன்னதி வீதியின் இரண்டு பக்கமும், உறியடி மண்டபத்தையும் தாண்டி ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருப்பதால், கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது.
ஆந்திரா, கர்நாடகா என உள்ளிட்ட பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. திருவண்ணாமலை வரும் பக்தர்கள் திருக்கோவிலுாருக்கும் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் கார்களை நிறுத்த இடவசதி இன்றி சாலையில் விட்டுச் செல்வதால் சன்னதி வீதியில் நடப்பதற்கு கூட இடம் இல்லை. பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்கள் நகராட்சி அலுவலகம் முன்பு நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து அரை கிலோ மீட்டர் துாரத்திற்கு பக்தர்கள் நடந்து சென்று சுவாமியை தரிசிக்க வேண்டிய நிலை உள்ளது.
அதேபோல் வடக்கு வீதி, கடை வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டது. கிழக்கு வீதியில் உள்ள திருமண மண்டபங்களில் பார்க்கிங் வசதி இல்லாததால், முகூர்த்த நாட்களில் நடந்து செல்லவே முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஆக்கிரமிப்பு எவ்வளவு உள்ளது என வருவாய்த் துறையும், நில அளவை துறையும், 10க்கும் மேற்பட்ட முறை அளந்து குறியீடு செய்தது மட்டுமே மிச்சம். இதுவரை ஆக்கிரமிப்பு அகற்ற நகராட்சி நிர்வாகமும், வருவாய்த் துறையும் முன்வரவில்லை. சமீபத்தில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றம் என அறிவிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாலையில் நிறுத்தப்பட்ட தள்ளு வண்டிகளை மட்டும் ஓரமாக தள்ளிச் சென்று விட்டனர். அதை தவிர எந்தவித ஆக்கிரமிப்பும் அகற்றப்படவில்லை.
ஐ.ஏ.எஸ்., ரேங்கில் இருக்கும் சப்கலெக்டர் தினசரி நகரை ஒரு முறையாவது வலம் வருகிறார். ஆக்கிரமிப்பு இருப்பது இவருக்கு தெரியாதா. சப்கலெக்டரிடம் அதிகாரிகள் தவறான தகவல்களை கூறி திசை திருப்புகிறார்களா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இனியும் காலம் தாழ்த்தாமல் நகரில் இருக்கும் நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களின் போக்குவரத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க நகராட்சி நிர்வாகமும், வருவாய்த்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.