/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வெள்ளத்தில் பாழான பம்பை வாய்க்கால் சீரமைக்கப்படுமா? மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
வெள்ளத்தில் பாழான பம்பை வாய்க்கால் சீரமைக்கப்படுமா? மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
வெள்ளத்தில் பாழான பம்பை வாய்க்கால் சீரமைக்கப்படுமா? மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
வெள்ளத்தில் பாழான பம்பை வாய்க்கால் சீரமைக்கப்படுமா? மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 20, 2025 11:44 PM

திருக்கோவிலூர்; பெஞ்சல் புயல் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட பம்பை வாய்க்காலை சீரமைக்க உடனடி நடவடிக்கை வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வந்தால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் இருக்கும் திருக்கோவிலூர் அணைக்கட்டில் இருந்து, வலதுபுறம் இருக்கும் பம்பை வாய்க்காலிலும், இடதுபுறம் ராகவன் வாய்க்கால், மலட்டாறு, சித்தலிங்க மடம் வாய்க்கால்களில் தண்ணீர் திருப்பி விடப்படும். இதன் காரணமாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பெருமளவில் பயன்பெறும். எனவே இந்த அணைக்கட்டு விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ளது.
இச்சூழலில் பெஞ்சல் புயல் வெள்ளத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீர் திருக்கோவிலுார் அணைக்கட்டை கடந்து சென்றது. இதனால் அணைக்கட்டின் வலது புறக்கரை உடைந்து, ஏமப்பேர் ஊருக்குள் தண்ணீர் புகுந்து, மீண்டும் தென்பெண்ணையாற்றில் கலந்தது. இதில் பம்பை வாய்க்காலின் கரை பல மீட்டர் துாரத்திற்கு அடித்துச் செல்லப்பட்டது. அப்படி ஒரு வாய்க்கால் இருந்ததற்கான தடையமே இல்லாத அளவிற்கு மோசமான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. அத்துடன் வாய்க்காலின் பெரும்பாலான பகுதிகள் உடைந்தும், ஆங்காங்கே மண் முடியும் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது.
தற்பொழுதும் தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 325 கன அடி நீர் சென்று கொண்டிருக்கும் நிலையில், உடைந்த கரையை நீர்வளத்துறை மிகுந்த சிரமங்களுக்கிடையே தற்காலிகமாக கட்டி முடித்துள்ளது. ஆனால் அடித்துச் செல்லப்பட்ட பம்பை வாய்க்காலை சீரமைக்கும் பணி எதுவும் நடைபெறவில்லை.
இதனால் ஆற்றில் வரும் தண்ணீர் மலட்டாறு, ராகவன் வாய்க்கால்களில் சீராக திருப்பி விடப்பட்டு இருக்கும் நிலையில், பம்பை வாய்க்காலில் தண்ணீர் திறக்க முடியாத சூழல் உள்ளது. இதன் மூலம் ஆற்காடு, கூடலூர், கல்பட்டு, மாம்பழப்பட்டு, கருங்காலிபட்டு, காங்கியனூர் அயப்பாக்கம் புதுச்சேரி மாநிலம் வாதானூர் என 26 ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கனமழை நின்று ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் கால்வாய் சீரமைக்கப்படாத நிலையில் பெரும்பாலான ஏரிகளில் தண்ணீரில் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. ஆற்றில் தண்ணீர் சென்றாலும் ஏரிக்கு தண்ணீர் திருப்ப முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் மார்ச் 16ம் தேதியிலிருந்து இரண்டாம் போக சாகுபடிக்காக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதுவரை சீரமைப்பு பணிகள் துவங்கப்படாமல் இருப்பது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.
நீர்வளத்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் பம்பை வாய்க்காலை முழுமையாக சீரமைத்து, இரண்டாம் போக சாகுபடிக்கு திறக்கப்படும் தண்ணீரையாவது பம்பை வாய்க்காலில் திருப்பிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மத்தியில் எதிரொலிக்க துவங்கி உள்ளது.

