/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
லாட்டரி சீட்டு விற்பனை அமோகம் சீரழியும் குடும்பங்கள் தடுக்குமா அரசு?
/
லாட்டரி சீட்டு விற்பனை அமோகம் சீரழியும் குடும்பங்கள் தடுக்குமா அரசு?
லாட்டரி சீட்டு விற்பனை அமோகம் சீரழியும் குடும்பங்கள் தடுக்குமா அரசு?
லாட்டரி சீட்டு விற்பனை அமோகம் சீரழியும் குடும்பங்கள் தடுக்குமா அரசு?
ADDED : ஜூன் 10, 2025 06:28 AM

திருக்கோவிலுார், அரகண்டநல்லுார் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்ட விற்பனை அமோகமாக நடக்கிறது. இதனால், பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது. முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீட்டு விற்பனையால் அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2003ம் ஆண்டு லாட்டரி சீட்டு விற்பனை தடை சட்டத்தை அமல்படுத்தினார். ஏழை, எளிய மக்களின் வருமானத்தை சுரண்டி கொழுத்த அதன் உரிமையாளர்கள் தொழிலை வேறு விதத்தில் புகுத்த துவங்கினர்.
நாகாலாந்து உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தடம் பதித்து தற்போது, ஆன்லைன் வாயிலாக தமிழகத்தில் மறைமுக லாட்டரி விற்பனையில் பணம் பார்த்து வருகின்றனர்.
குறிப்பாக திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பெரு நகரங்களில் ஏஜன்ட்டை நியமித்து அவர்களின் கீழ் நிலையில் திருக்கோவிலுார், அரகண்டநல்லுார், கண்டாச்சிபுரம், மடப்பட்டு என படிப்படியாக ஏஜனட்டுகளை நியமித்து அவர்கள் வாயிலாக நம்பிக்கையின் அடிப்படையில் லாட்டரி சீட்டின் பெயர் மற்றும் சீரியல் எண் மட்டுமே இடம்பெறும் துண்டு ஜெராக்ஸ் சீட்டு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சீட்டின் விலை 100 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை பரிசுக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. தினசரி மாலை 3:50 மணிக்கு இதற்கான முடிவு ஆன்லைனில் வெளியிடப்பட்டவுடன் பரிசு விழுந்தவர்கள் சீட்டு வாங்கிய ஏஜென்ட் வாயிலாக அதற்கான தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
குறிப்பாக மார்க்கெட் கமிட்டிக்கு வரும் விவசாயிகள், தினசரி மூட்டை துாக்கும் கூலி தொழிலாளர்களை குறி வைத்து டீக்கடை போன்ற இடங்களில் மிக ரகசியமாக தொழிலை அரங்கேற்றி வருகின்றனர்.
அரகண்டநல்லுார் பகுதியின் ஏஜன்ட்டாக செயல்படும் ஒரு நபர் குலதீபமங்கலம் கிராமத்தில் முகாமிட்டு அரகண்டநல்லுார், திருக்கோவிலுார், கண்டாச்சிபுரம் பகுதிகளுக்கு முக்கிய டீலராக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
டாஸ்மாக் குடி பிரியர்களே பெரும்பாலும் இந்த லாட்டரி சீட்டு பிரியர்களாகவும் இருப்பதால் இவர்களின் குடும்பம் சின்னாபின்னமாகி சிதைந்து கொண்டிருக்கிறது.
தமிழக அரசின் கண்ணில் மண்ணை துாவி விட்டு கோடிக்கணக்கில் சத்தமில்லாமல் குவித்து கொண்டிருக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை விட மிகக் கொடிதான இந்த கும்பல் மீது போலீசார் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும் அது வெறும் கண்துடைப்பு நிகழ்வாகவே இருந்து வருகிறது.
இதற்கு துணை போகும் போலீசும் இருக்கத்தான் செய்கின்றனர். தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு இதனை ஒடுக்குவதன் மூலம் பல அப்பாவி குடும்பங்களில் கண்ணீரை துடைக்க முடியும்.