/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அழிவின் விளிம்பில் பாரம்பரிய மரங்கள்; அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா?
/
அழிவின் விளிம்பில் பாரம்பரிய மரங்கள்; அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா?
அழிவின் விளிம்பில் பாரம்பரிய மரங்கள்; அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா?
அழிவின் விளிம்பில் பாரம்பரிய மரங்கள்; அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா?
ADDED : ஜூன் 09, 2025 04:56 AM
தியாகதுருகம் : பாரம்பரியமான நாட்டு மரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதால் அவற்றை பாதுகாக்கும் வகையில் மாவட்டத்திலுள்ள தரிசு நிலங்களிலும், சாலை ஓரங்களிலும் நட்டு வளர்க்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.
இயற்கை வளம் குறையாமல் இருந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாரம்பரிய வகை நாட்டு மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மழை பொழிவு குறைந்து அனைத்து தரப்பினரும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நமது முன்னோர்கள் இயற்கை காடுகளை பாதுகாத்து தரிசு நிலங்களில் பாரம்பரியமான வகை நாட்டு மரங்களை வளர்த்தனர். இவ்வகை மரங்கள் மருத்துவ குணம் உள்ளதாகவும் அன்றாட தேவைக்கு பயன்படும் பொருட்களை கொடுக்கும் மரங்களாகவும் இருந்தன.
குறிப்பிடத்தக்க வகையில் வேம்பு, ஆல், அரசு, இலுப்பை, பனை, பூவரசு, காட்டுவாகை, நுணா, நாவல், வாதநாராயணம், புங்கை, வேங்கை, வில்வம், கொன்றை, அத்தி உள்ளிட்ட நாட்டு மரங்கள் தரிசு நிலங்களில் இயற்கையாகவே செழித்து வளர்ந்தன.
இதில் பெரும்பாலான மரங்களின் இலை, பூ, காய், கனி, பட்டை, வேர் ஆகியவை மருத்துவ குணம் நிறைந்தது. இது போன்ற மரங்களை யாரும் வெட்டக்கூடாது என அக்காலத்தில் ஊர் கட்டுப்பாடு இருந்தது. இந்த மரங்கள் வளர்ந்து சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பை கொடுத்து பருவ மழை போதிய அளவு பெய்து நீர் வளம் பெருகி விவசாயம் செழித்தது.
இவற்றில் வானுயர்ந்து அடர்ந்து வளர்ந்து நிழல் தரும் ஆல், அரசு, இலுப்பை போன்ற மரங்களை தற்போது பார்ப்பதே அரிதாகிவிட்டது. குறிப்பாக கோவில்களில் தேர் செய்வதற்கு இலுப்பை மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் எண்ணைய் மருத்துவ குணம் நிறைந்ததாகும். இவ்வகை மரங்களை கிராமங்களில் கூட பார்க்க முடியவில்லை.
மாவட்டத்தில் சாலை விரிவாக்க பணிகளின் போது ஓரங்களில் வளர்ந்திருந்த புளியமரம் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மரங்கள் வேரோடு அழிக்கப்பட்டு விட்டன. அதேபோல் பல இடங்களில் அரசு தரிசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் அங்கிருந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு வீடுகள் கட்டியும் விளை நிலங்களாகவும் மாற்றி விட்டனர். பெரும்பாலான ஏரிக்கரைகளில் வளர்க்கப்பட்டிருந்த மரங்களும் வேரோடு பிடுங்கி அழிக்கப்பட்டு விட்டது.
வனப்பகுதியில் இருந்த இயற்கை காடு பெரும்பகுதி அழிக்கப்பட்டு அங்கு யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீமை கருவேல மரங்கள் மட்டுமே நீக்கமற அனைத்து இடங்களிலும் செழித்து வளர்ந்து காணப்படுகிறது.
இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'பல்வேறு காரணங்களுக்காக நாட்டு மரங்களை அழிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதனை தடுக்க தவறினால் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பருவமழை முறையாக பெய்யாமல் அனைத்து தரப்பினரும் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.
பாரம்பரியமான வகை நாட்டு மரங்களை தரிசு நிலங்களிலும் சாலை ஓரங்களிலும் வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.