/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதர்மண்டி கிடக்கும் மணிமுக்தா அணை பாசன கால்வாய் துார்வாரப்படுமா? கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை தேவை
/
புதர்மண்டி கிடக்கும் மணிமுக்தா அணை பாசன கால்வாய் துார்வாரப்படுமா? கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை தேவை
புதர்மண்டி கிடக்கும் மணிமுக்தா அணை பாசன கால்வாய் துார்வாரப்படுமா? கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை தேவை
புதர்மண்டி கிடக்கும் மணிமுக்தா அணை பாசன கால்வாய் துார்வாரப்படுமா? கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை தேவை
ADDED : டிச 04, 2024 10:33 PM

கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் 36 அடி உயரம் (736.96 மில்லியன் கன அடி) கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. கல்வராயன்மலை பகுதியில் விழும் மழை நீர் மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாக அணைக்கு வருகிறது. மேலும், மூரார்பாளையம் பாப்பாங்கால் ஓடையும் அணைக்கு நீர்வரத்தாக உள்ளது.
மழைக்காலத்தில் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, சில நாட்களுக்கு பிறகு 12,337 மீட்டர் நீளம் கொண்ட முடியனுார் வரை செல்லும் பிரதான பாசன மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்படும். பிரதான மதகில் இருந்து 3 கிளை வாய்க்கால் வழியாக பல்வேறு கிராமங்களை சேர்ந்த விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது.
இதன் மூலம் புதிய மற்றும் பழைய பாசனத்தை சேர்ந்த 5,493 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் நேரடியாக பயன்பெறும். மேலும், சுற்று வட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏரி, கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி இருக்கும்.
நடப்பாண்டு போதிய மழையில்லாததால் நவம்பர் மாத இறுதி வரை அணை நிரம்பாமல் இருந்தது. இந்நிலையில், பெஞ்சல் புயலால் பெய்த தொடர் மழையால் ஒரே நாளில் அணை முழு கொள்ளளவை எட்டியது.
மொத்த கொள்ளளவான 36 அடியில், 34 அடி உயரத்திற்கு (590 மில்லியன் கனஅடி) தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து இருந்ததால், விநாடிக்கு 16,100 கன அடி தண்ணீர் புதிய ெஷட்டர்கள் வழியாக ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால், மணிமுக்தா ஆற்றில் இருந்த அணைக்கட்டுகள் நிரம்பின.
தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததால், ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் அளவு படி, படியாக குறைக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டது.
அணை முழுவதுமாக நிரம்பியதையடுத்து, பாசன மதகு வழியாக தண்ணீர் திறப்பதற்கான ஏற்பாடுகளை நீர்வளத்து அதிகாரிகள் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இன்னும் சில நாட்களில் தண்ணீர் விடப்படுவதற்கான சூழல் உள்ளது. ஆனால், தண்ணீர் செல்லும் பாசன வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடப்பதால், திறக்கப்படும் தண்ணீர் கடை மடை வரை செல்வதில் சிக்கல் உள்ளது.
வாய்க்காலில் பல இடங்கள் துார்ந்த போன நிலையில் இருப்பதால், தண்ணீர் ஒரே இடத்தில் நின்று வீணாகிறது. இதனால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, பாசனத்திற்காக தண்ணீர் திறப்பதற்கு முன், அனைத்து வாய்க்கால்களையும் போர்க்கால அடிப்படையில் துார்வாரிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.