/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரிகளில் சீமைக் கருவேல மரங்கள்... அகற்றப்படுமா? நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம்
/
ஏரிகளில் சீமைக் கருவேல மரங்கள்... அகற்றப்படுமா? நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம்
ஏரிகளில் சீமைக் கருவேல மரங்கள்... அகற்றப்படுமா? நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம்
ஏரிகளில் சீமைக் கருவேல மரங்கள்... அகற்றப்படுமா? நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம்
ADDED : அக் 14, 2024 09:07 AM

கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட கோமுகி, மணிமுக்தா அணைகள், மூன்று ஆறுகள் மற்றும் 213 ஏரிகள் மற்றும் 72 அணைகட்டுகள் உள்ளன. இரு அணைகள் மற்றும் ஏரி பாசனத்தை நம்பி 18 ஆயிரம் எக்டர் விவசாய நிலங்கள் உள்ளன.
ஆலத்துார் உள்ளிட்ட அதிகப்படியான ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துாரில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி மூலம் ஆலத்துார், அரியபெருமானுார் பகுதிகளைச் சேர்ந்த 320 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது.
ரங்கநாதபுரம் பகுதிகளிலும் இந்த ஏரி நீர் மூலம் பாசனம் செய்து வருகின்றனர். இந்த ஏரி நிரம்பி வெளியேறும் நீர் சிறுவங்கூர் ஏரிக்குச் செல்கிறது. ஆனால் ஏரி முழுதும் பரந்து விரிந்து காணப்படும் சீமைக் கருவேல மரங்களால் இங்குள்ள நீர் முழுவதுமாக உறிஞ்சி வீணாகி வருவதுடன் ஏரி நீர் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதேபோன்று கள்ளக்குறிச்சி பகுதியின் பெரும்பாலான ஏரிகள் அனைத்திலும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் ஏரியில் தேங்கும் நீர் விரைவாக வற்றிப்போவதுடன், இப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறு, போர்வெல் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஏரி நீர் பாசனம் பெறும் கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டும் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, இப்பகுதி விவசாய நிலங்களை பாதுகாக்கும் வகையில், ஏரிகள் முழுதும் நிறைந்து காணப்படும் கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவதற்கு பொதுப்பணித் துறையினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.