/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாக்கம்பாடி அணைக்கட்டு நீர் வரத்து வாய்க்கால் சீரமைக்கப்படுமா? கலெக்டர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
/
பாக்கம்பாடி அணைக்கட்டு நீர் வரத்து வாய்க்கால் சீரமைக்கப்படுமா? கலெக்டர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
பாக்கம்பாடி அணைக்கட்டு நீர் வரத்து வாய்க்கால் சீரமைக்கப்படுமா? கலெக்டர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
பாக்கம்பாடி அணைக்கட்டு நீர் வரத்து வாய்க்கால் சீரமைக்கப்படுமா? கலெக்டர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : டிச 06, 2024 10:37 PM
கள்ளக்குறிச்சி; பாக்கம்பாடி அணைக்கட்டிலிருந்து சின்னசேலம் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு செல்லக்கூடிய வாய்க்கால்களில் சீரமைப்பு பணி மேற்கொண்டு முழுமையாக நீர்வரத்துக்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், பெரியேரி ஊராட்சியில் உள்ள வஜிஸ்டா நதியின் குறுக்கே பாக்கம்பாடி அணைக்கட்டு உள்ளது.
இந்த அணைக்கட்டிலிருந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் சுற்று வட்டார பகுதியில் உள்ள 10 கிராமங்களைச் சேர்ந்த 16 ஏரிகளுக்கும், கடலுார் மாவட்டத்திற்கு 9 ஏரிகளுக்கும் நீர் வரத்து ஏற்படும் வகையில் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.
பருவ மழை காலங்களில் அணைகட்டிலிருந்து அனைத்து ஏரிகளுக்கும் நீர் வரத்து ஏற்பட்டு முழுமையாக நிரம்பும் பட்சத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வாய்ப்பு உள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் பாக்கம்பாடி அணைக்கட்டில் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அணைக்கட்டுகளில் இருந்து செல்லக்கூடிய சில ஏரிகளின் நீர் வரத்து வாய்க்கால் பராமரிப்பின்றி பல இடங்களில் துார்ந்திருப்பதால் நீர் வரத்து ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக காளசமுத்திரம், தாகம்தீர்த்தாபுரம், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராம ஏரிகளுக்கான நீர் வரத்து வாய்க்கால் துார்ந்த நிலையிலும், புதர் மண்டியும் காணப்படுகிறது.
சில இடங்களில் வாய்க்கால் மேடான பகுதியாகவும் இருக்கிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கோடை காலங்களில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டு பெரும் பாதிப்புக்கள் சந்திக்க நேரிடும் வாய்ப்பு உள்ளது என அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
சின்னசேலம் பகுதியில் பாக்கம்பாடி அணைக்கட்டு மூலம் நீர் வரத்து ஏற்படும் ஏரிகளின் கால்வாய்களை சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிகளின் வாய்க்கால்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு முழமையாக நீர் வரத்து ஏற்பட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.