/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலூரில் பைப் புதைக்கும் நடவடிக்கை கைவிடப்படுமா? புராதன நிலவறைக் கால்வாய் பாதுகாக்க கோரிக்கை
/
திருக்கோவிலூரில் பைப் புதைக்கும் நடவடிக்கை கைவிடப்படுமா? புராதன நிலவறைக் கால்வாய் பாதுகாக்க கோரிக்கை
திருக்கோவிலூரில் பைப் புதைக்கும் நடவடிக்கை கைவிடப்படுமா? புராதன நிலவறைக் கால்வாய் பாதுகாக்க கோரிக்கை
திருக்கோவிலூரில் பைப் புதைக்கும் நடவடிக்கை கைவிடப்படுமா? புராதன நிலவறைக் கால்வாய் பாதுகாக்க கோரிக்கை
ADDED : ஜன 13, 2024 03:31 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், தெப்பக்குளம், தீர்த்த குளங்களுக்குச் செல்லும் புராதன நிலவறைக் கால்வாயின்கட்டமைப்பை சிதைக்கும் வகையில் புதிதாக பைப் பொருத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் அருகே தீர்த்த குளமும், பெரிய கோபுரம் அருகே தெப்பக்குளமும் உள்ளது. இரு குளங்களுக்கு பெரிய ஏரியிலிருந்து தண்ணீர் வர நிலவறை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் கொஞ்சம் தண்ணீர் வந்தாலும், ஏரி நிரம்பி விடும். அதற்காக ஆற்றில் இருந்து ஏரி கால்வாய் உள்ளது. ஏரியிலிருந்து நிலவறை கால்வாய் மூலம் தீர்த்த குளம், தெப்பகுளங்களுக்கு தண்ணீர் செல்லும்.
எவ்வளவு வறட்சி காலங்களிலும் இந்த குளங்கள் நிரம்பி வழியும். தெப்பக்குளத்தில் இருந்து வடியும் தண்ணீர் விவசாய பாசனத்திற்கு பயன்பெறும் வகையில் நகரின் கட்டமைப்பு உள்ளது.
இதற்காக ஏரியிலிருந்து கெங்கையம்மன் கோவில் அருகே பெரிய மதகு உள்ளது.
இந்த மதகைத் திறந்தால், நிலவறை கால்வாய் மூலம் இரட்டை விநாயகர் கோவில் அருகே உள்ள செவ்வக வடிவ கருங்கல் தொட்டி உள்ளது.
இங்கிருந்து நேராக கிழக்கு திசை நோக்கி தெற்கு வீதி வழியாகச் சென்று, வடக்கு வீதி, மதுரை வீரன் கோவில் தெரு வழியாக 400 மீட்டர் பயணித்து தெப்பக்குளத்தை அடைகிறது நிலவறை கால்வாய்.
அதேபோல் இரட்டை விநாயகர் கோவிலில் இருந்து பிரியும் மற்றொரு கால்வாய் பெருமாள் நாயக்கர் தெரு வழியாக 300 மீட்டர் சென்று தீர்த்த குளத்தில் கலக்கும்.
இந்த கால்வாய்கள் இரண்டடி அகலம், நான்கடி உயரம் கொண்டது. செதுக்கப்பட்ட கருங்கற்களால் கீழ்பகுதி, பக்கவாட்டு கற்கள், மேற்பகுதி சுண்ணாம்பு கலவை கட்டுமானத்தால் நேர்த்தியாக மூடப்பட்டுள்ளது. ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் நீள் செவ்வக வடிவ தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் கருங்கல் பலகையால் மூடப்பட்டுள்ளது.
கால்வாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் கருங்கல் பலகையை எடுத்துவிட்டு அடைப்புகளை வெளியேற்றுவதன் மூலம் கால்வாய் அடைப்பு முழுதும் சீரடையும்.
ஆனால், கால்வாயை சிலர் ஆக்கிரமித்து, வீடு கட்டியுள்ளனர். இதனால், குளங்களுக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்றி, குறிப்பிட்ட இடங்களில் இருக்கும் அடைப்பை சீர் செய்தாலே பழமையான நிலவறை கால்வாய் மூலம் குளங்களுக்கு தண்ணீரை வெகு எளிதில் கொண்டு செல்லலாம்.
ஆனால், ஆக்கிரமிப்பை அகற்ற முன்வராமல், நகராட்சி நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை மாற்றுத்திட்டத்தை தயாரித்து செயல்படுத்த துவங்கியுள்ளது.
தெப்பக்குளத்தை புதுப்பித்து, குளத்திற்கு புதிதாக ஏரியிலிருந்து கெங்கையம்மன் கோவில் அருகே ஒரு பம்பிங் ஸ்டேஷனை ஏற்படுத்தி, சின்ன கடைவீதி, சன்னதி வீதி, வழியாக பைப் லைன் புதைத்து தீர்த்தக் குளம், தெப்பக்குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அதற்கான டெண்டரும் விடப்பட்டு பணிகள் துவங்க உள்ளது.
இவ்வாறு செய்வதன் மூலம் புராதன நகரமான திருக்கோவிலுாரின் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலவறைக் கால்வாய் மூடி மறைக்கப்படும். நவீன தொழில் நுட்பங்கள் நிறைந்திருக்கும் இக்காலகட்டத்தில் நிலவறை கால்வாயில் எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை துல்லியமாக கண்டறிந்து, அதனை சீரமைப்பதன் மூலம் குளங்களுக்கு தண்ணீரை எளிதில் கொண்டு செல்ல முடியும்.
இதன் மூலம் அதிக செலவினத்தை குறைக்க முடியும். அத்துடன் பழமையை பாதுகாத்த பெருமையும் கிடைக்கும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.