/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'ஏர் ஹாரன்' பயன்பாடு தடுக்கப்படுமா?
/
'ஏர் ஹாரன்' பயன்பாடு தடுக்கப்படுமா?
ADDED : நவ 11, 2024 04:21 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் 'ஏர் ஹார்ன்கள்' பயன்படுத்துவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி நகர பகுதி வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியாக உள்ளது. மாவட்ட தலைநகரான இங்கு ஆட்டோ, பள்ளி, கல்லுாரி வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் இயங்குகிறது. கள்ளக்குறிச்சியில் பெரும்பாலான தனியார் பஸ்களில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல், அதிக இரைச்சலுடன் கூடிய 'ஏர் ஹாரன்கள்' பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாகனங்களின் 'ஏர் ஹாரன்' பயன்பாட்டினால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோர மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் வாகன ஓட்டுனர்களிடம் கேட்கும்போது அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. பஸ் நிலையம் அருகில் அரசு அலுவலகங்கள், வங்கிகள், கோர்ட்டுகள், பள்ளிகள் ஆகியன இயங்கி வருகின்றன. நகரில் நுழைவதிலிருந்து பஸ் நிலையம் வரை 2 கி.மீ., தொலைவிற்கும் மேல் ஒரு சில பஸ் டிரைவர்கள் அதிக சப்தத்துடன் 'ஏர் ஹாரன்களை' அடித்தபடி செல்கின்றனர்.
ஒவ்வொரு முறையும், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடும்போது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஓரிரு நாட்கள் ஆய்வு செய்வதும் அதன் பிறகு கண்டு கொள்ளாமலும் விட்டு விடுகின்றனர். அதன் பிறகு மீண்டும் ஏர்ஹாரன்களை உபயோகப்படுத்துகின்றனர்.
'ஏர் ஹாரன்கள்' பயன்பாட்டினை நிரந்தரமாக தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.