/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படுமா? ...: பருவ மழைக்கு முன்னதாக நடவடிக்கை தேவை
/
மாவட்டத்தில் ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படுமா? ...: பருவ மழைக்கு முன்னதாக நடவடிக்கை தேவை
மாவட்டத்தில் ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படுமா? ...: பருவ மழைக்கு முன்னதாக நடவடிக்கை தேவை
மாவட்டத்தில் ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படுமா? ...: பருவ மழைக்கு முன்னதாக நடவடிக்கை தேவை
ADDED : ஆக 04, 2025 11:28 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, பஞ்சாயத்திற்குப்பட்ட ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்களை பருவ மழைக்கு முன்னதாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழில். இங்கு, நெல், கரும்பு, மக்காசோளம், மஞ்சள், மரவள்ளி, பருத்தி, மணிலா, உளுந்து அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயத்திற்கு ஆற்றுநீர் பாசனம் பெரும் உதவியாக உள்ளது. இங்கு, பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் கோமுகி, மணிமுக்தா அணையும், 335 ஏரிகள் மற்றும் கோமுகி, மணிமுக்தா, கெடிலம் ஆகிய மூன்று ஆறுகள் உள்ளன.
அதேபோல் மாவட்டத்தில் ஊராட்சி பஞ்சாயத்திற்கு உட்பட்டு 380 ஏரிகள் உள்ளது. இரு அணைகள் மற்றும் ஏரி பாசனத்தை நம்பி ஆண்டுதோறும் 2 லட்சத்து 50 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் விவசாயம் நடக்கிறது.
வடக்கிழக்கு பருவ மழை காலங்களில் அணைகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தொடர் மழையின் போது அணைகள் நிரம்பியவுடன் பாதுகாப்பு கருதி ஷட்டர் திறந்து ஆறுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும். ஆறுகளில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிந்தோடும் போது, தடுப்பணைகளிலிருந்து ஏரிகளுக்கு நீர் வரத்து கால்வாய்கள் வழியாக செல்லும் நீர் மூலம் பெரும்பாலன ஏரிகள் நிரம்பி விடும். இதன் மூலம் ஏரியை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும். நிலத்தடி நீர் அளவும் உயரும்.
இந்நிலையில், ஆறுகளின் தடுப்பணைகளிலிருந்து ஏரிகளுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான நீர் வரத்து கால்வாய்களில் தற்போது அதிகளவில் விஷல் புற்கள், செடி கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது. அதேபோல், பெரும்பாலான இடங்களில் கால்வாய் ஆக்கிரமிப்பிலும் சிக்கியுள்ளது. இதனால், பருவ மழையின் போது நீர் வரத்து கால்வாய் மூலம் பெரும்பாலான ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் நிலவுகிறது.
கலெக்டர் அலுவலக விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்திற்குட்பட்ட ஏரிகளின் நீர் வரத்து கால்வாய், உபரி நீர் செல்லக்கூடிய கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒவ்வொரு முறையும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கும் அதிகாரிகள் அதன் பின்பு அதனை பற்றி துளியும் கவலைப்படுவதில்லை.
தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் நீர் வரத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அடுத்த 3 மாதங்களில் வடக்கிழக்கு பருவ மழையும் துவங்கவுள்ளது.
பருவ மழை துவங்குவதிற்கு முன்னதாக மாவட்டத்தில் உள்ள ஏரி வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, உபரி நீர் செல்ல கூடிய வாய்க்கால்கால்களை பொதுப்பணித்துறை மூலம் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.