/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் மீண்டும் மஞ்சள் வார சந்தை துவக்கப்படுமா? சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை
/
கள்ளக்குறிச்சியில் மீண்டும் மஞ்சள் வார சந்தை துவக்கப்படுமா? சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை
கள்ளக்குறிச்சியில் மீண்டும் மஞ்சள் வார சந்தை துவக்கப்படுமா? சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை
கள்ளக்குறிச்சியில் மீண்டும் மஞ்சள் வார சந்தை துவக்கப்படுமா? சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை
ADDED : பிப் 09, 2024 11:06 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மஞ்சள் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க மஞ்சள் வார சந்தையை மீண்டும் துவக்கி நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு கரும்பு, மக்காச்சோளம் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் 1,500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் மஞ்சள் பயிர் சாகுபடி செய்யப்பட்டது. இங்கு சாகுபடி செய்யப்படும் மஞ்சள், சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.
சில சமயங்களில் மஞ்சள் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து மஞ்சளை கொள்முதல் செய்கின்றனர். பணப்பயிராக விளங்கும் மஞ்சள் சாகுபடி செய்வதில், விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.
சில நேரங்களில் பருவமழை பெய்யாதபோது, கோடை காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பயிர் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.
அத்தருணத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது.
பத்து மாத பயிரான மஞ்சள், ஆண்டு தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் சாகுபடி செய்து, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
பின்னர் அதனை அவியல்போட்டு (வேகவைத்து) பதப்படுத்தி விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனர்.
வெளி மாவட்டங்களுக்கு மஞ்சள் மூட்டைகளைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவு, அவ்வாறு கொண்டு சென்றாலும் சந்தையில் திடீரென ஏற்படும் விலை வீழ்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் அவ்வப்போது பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடியின் பரப்பளவு படிப்படியாக குறைந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆண்டுதோறும் பருத்தி வார சந்தை நடைபெற்று வருகிறது.
அதேபோல் பல ஆண்டுகளுக்கு முன் மஞ்சள் வார சந்தையும் துவங்கி ஒரு சில ஆண்டுகள் நடந்தது. ஆனால் வியாபாரிகளின் போதிய ஒத்துழைப்பின்மையால் மஞ்சள் வார சந்தை கைவிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது மஞ்சள் அறுவடை செய்யப்படும் நிலையில், வியாபாரிகளை வரவழைத்து கள்ளக்குறிச்சியில் மீண்டும் மஞ்சள் வார சந்தையை துவக்குவதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு துவக்கினால் மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடியின் பரப்பளவு வருங்காலங்களில் மீண்டும் அதிகரிப்பதற்கான வழிவகைகள் ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.