/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆக்கிரமிப்பில் இருந்து நீர்நிலைகள் மீட்கப்படுமா? மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
ஆக்கிரமிப்பில் இருந்து நீர்நிலைகள் மீட்கப்படுமா? மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஆக்கிரமிப்பில் இருந்து நீர்நிலைகள் மீட்கப்படுமா? மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஆக்கிரமிப்பில் இருந்து நீர்நிலைகள் மீட்கப்படுமா? மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 15, 2025 12:12 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் முக்கியத் தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது. நெல், கரும்பு, மரவள்ளி, மஞ்சள், மக்காச்சோளம், உளுந்து, பருத்தி, கம்பு ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் நன்செய் பயிரான நெல் மற்றும் கரும்பு பயிர்கள் அதிக பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது.
விவசாயம் செழிப்பதற்கு கோமுகி, மணிமுக்தா ஆகிய அணைகளும், 593 ஏரிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களும் முக்கிய நீராதாரங்களாக உள்ளன.
இது மட்டுமன்றி கோமுகி ஆற்றில் 11 தடுப்பணைகள், மணிமுத்தா ஆற்றில் 4 தடுப்பணைகள் உள்ளன.
மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீர் இவைகளில் சேமிக்கப்பட்டு விவசாய பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயர வழி வகை செய்கிறது.
இதன் காரணமாக கிணற்று பாசனத்தின் மூலம் நன்செய் பயிர்களுக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்கிறது.
பரப்பளவில் பெரிதாக உள்ள 212 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும் மற்ற 381 ஏரிகள் கிராம ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இவைகளின் வரத்து வாய்க்கால்களும் நீர்ப்பிடிப்பு பகுதியும் பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு விளை நிலங்களாகவும் வீடுகளாகவும் மாற்றப்பட்டுள்ளது.
இதனால் மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியாமல் விரையமாகி கடலில் சென்று கலக்கிறது.
மாவட்டத்தில் பருவ மழை போதிய அளவு பெய்தால் கூட ஏரி, குளங்கள் நிரம்ப முடியாமல் போவதால் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது .
'பெஞ்சல்' புயலால் மாவட்டத்தில் அதிக கன மழை பெய்த போதிலும் இன்னும் 347 ஏரிகள் முழுமையாக நிரம்பாமல் போனதற்கு ஆக்கிரமிப்பு முக்கிய காரணமாக உள்ளது.
மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரி, குளங்களையும் முறையாக கணக்கிட்டு அதன் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து பாரபட்சமின்றி அப்புறப்படுத்தி மீண்டும் நீர் பிடிப்பு பகுதிகளாக மாற்ற வேண்டும்.
குறிப்பாக அரசியல் தலையீடுகளை முற்றிலும் தவிர்த்து பொது நல நோக்கோடு நீர்நிலைகளை மீட்கும் பணியில் அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
அதேபோல் நீர்நிலைகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் வரத்து வாய்க்கால்களை ஆழப்படுத்தி வடிகால் அமைப்பதன் மூலம் ஏரி குளங்கள் முழுமையாக நிரம்ப வழி வகை ஏற்படும்.
இது போன்ற ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொள்வதன் மூலம் நமது முன்னோர்கள் ஏற்படுத்திக் கொடுத்த நீர் கட்டமைப்பை மீண்டும் மீட்டெடுக்க முடியும்.
இதற்கு விரிவான திட்டத்தை உருவாக்கி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.