சின்னசேலம்; சின்னசேலம் அருகே கார் மோதி பெண் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் மனைவி பானுப்பிரியா, 30; இவர் நேற்று காலை செல்லியம்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றவர் மாலை 3:00 மணியளவில் மனைவி பானுப்பிரியா, மகன் புவனேஷ், 3; உறவினர் புவனேஸ்வரி, 27; ஆகியோருடன் ஒரே பைக்கில் சேலம் - சென்னை பைபாஸ் சாலையில் திருமங்கலம் திரும்பினார்.
மாலை 3:30 மணியளவில் சின்னசேலம் ரயில்வே கேட் அருகே பைபாஸ் சாலையை கடக்க முயன்ற போது சேலத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற கார் அஜித்குமார் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.
இதில் பானுப்பிரியா சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த மற்ற 3 பேரும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.