/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்திய பெண்ணுக்கு தர்ம அடி
/
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்திய பெண்ணுக்கு தர்ம அடி
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்திய பெண்ணுக்கு தர்ம அடி
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்திய பெண்ணுக்கு தர்ம அடி
ADDED : ஆக 09, 2025 10:35 PM

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில், குழந்தை கடத்திய பெண்ணை பிடித்து, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் சரவணன் மனைவி திவ்யா, 23; கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில், ஆக., 6ல் ஆண் குழந்தை பிறந்தது.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்ததால், ஐ.சி.யூ., வார்டில் திவ்யா அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது மாமியார் தங்கம்மாள், தாய் காந்தி ஆகியோர் குழந்தையை கவனித்தனர். நேற்று முன்தினம் இரவு, குழந்தையை தன் அருகே படுக்க வைத்து கொண்டு, தங்கம்மாள் துாங்கினார். அப்போது, 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு குழந்தையை துணியில் சுற்றி கடத்த முயன்றார்.
திடீரென எழுந்த தங்கம்மாள், குழந்தை இல்லாததை கண்டு கூச்சலிட்டதால், அருகிலிருந்த அனைவரும் எழுந்தனர். அப்போது, பெண் ஒருவர் குழந்தையை துாக்கிக் கொண்டு ஓடுவதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பெண்ணிடம் இருந்த குழந்தையை மீட்டு, தங்கம்மாளிடம் கொடுத்ததுடன், கடத்தலில் ஈடுபட்ட பெண்ணுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
கள்ளக்குறிச்சி போலீசார், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதில், சின்னசேலம் அடுத்த பாண்டியன்குப்பத்தை சேர்ந்த ராஜபாண்டியன் மனைவி லட்சுமி, 31, என்பது தெரிந்தது. திருமணமாகி ஐந்து ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், கைக்குழந்தையை திருடியதாக லட்சுமி போலீசாரிடம் தெரிவித்தார்.
நேற்று காலை, 6:00 மணிக்கு பொதுமக்கள், கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மகப்பேறு மருத்துவமனையில் கேமரா பொருத்த வேண்டும்; நோயாளிகளுடன் வரும் உறவினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்; மருத்துவமனை வளாகத்தில், புறக்காவல் நிலையம் அமைப்பதுடன், போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். போலீசார் பேச்சு நடத்தி, அவர்களிடம் மறியலை கைவிட செய்தனர்.