/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் நான்கு வழிச்சாலை பணி தீவிரம்! விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது
/
திருக்கோவிலுார் நான்கு வழிச்சாலை பணி தீவிரம்! விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது
திருக்கோவிலுார் நான்கு வழிச்சாலை பணி தீவிரம்! விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது
திருக்கோவிலுார் நான்கு வழிச்சாலை பணி தீவிரம்! விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது
ADDED : ஏப் 09, 2025 10:59 PM

முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், திருக்கோவிலுாரில் இருந்து திருவண்ணாமலை வரை கடந்தாண்டு நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்டது.
இதன் மூலம் தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், திருவண்ணாமலை, வேலுார், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு மிக எளிதாக சென்று வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஆசனூரில் இருந்து பிரியும் திருக்கோவிலுார் சாலையை, நான்கு வழி சாலையாக மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து முதல் கட்டமாக, 16 கி.மீ., துாரத்திற்கு, கீழத்தாழனூரில் இருந்து கெடிலம் வரையிலும் மற்றும் எறையூர் பாளையத்திலிருந்து கோட்டை வரையிலும், நான்கு வழி சாலை திட்டப்பணி கடந்த ஜனவரியில் துவங்கி வேகமாக நடந்து வருகிறது.
சமீபத்தில் திருக்கோவிலுார் புறவழிச்சாலை உயர்மட்ட பாலத்தில் இருந்து கீழத்தாழனூர் வரை 10 மீட்டர் இருவழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டது. அதேபோல கோட்டையில் இருந்து ஆசனூர் வரையிலும் 10 மீட்டர் சாலையாக அகலப்படுத்தப்பட்டது.
இதனைத் தவிர்த்து எஞ்சிய பகுதிகளில், 16 கி.மீ., துாரத்திற்கு ரூ. 101 கோடி மதிப்பீட்டில் நான்கு வழி சாலை பணி நடக்கின்றன. ஒரு மீட்டர் சென்டர் மீடியனுடன் கூடிய 16 மீ., அகலம் கொண்ட இந்த நான்கு வழி சாலை திட்டத்தில், சிறு பாலங்களை விரிவுபடுத்தும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.
இத்திட்டம் நிறைவடையும் நிலையில் எஞ்சிய பகுதிகளும் நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் தென் மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை, வேலூர், திருப்பதி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, ஆசனூரில் இருந்து திருவண்ணாமலை வரை, 75 கி.மீ., பயணிப்பது எளிதாக அமையும்.
சுற்றுவட்ட சாலை
இந்நிலையில் நகரை சுற்றி நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. தபோவனத்தில் இருந்து மணம்பூண்டி வழியாக அரகண்டநல்லூர், ஆண்டவர் மில் வரை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது.
அங்கிருந்து கீழையூரை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 110 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியானது.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கீழையூரில் இருந்து ஆவியூர், நெமிலி கூட்ரோடு வழியாக கொளப்பாக்கம் கூட்ரோடு வரை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்துவதற்கான திட்டப் பணி, தயாரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கொளப்பாக்கம் கூட் ரோட்டில் இருந்து பிரியும் புறவழிச் சாலையும் நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டமும் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான அளவீடு பணிகள் நிறைவடைந்து விட்டது.
இத்திட்டங்கள் நிறைவடையும் பொழுது, திருக்கோவிலுார் நகருக்குள் வராமலேயே நான்கு வழிச்சாலையில் நகரை சுற்றிப் பயணிக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.