ADDED : ஏப் 19, 2025 01:09 AM
சின்னசேலம், ;சின்னசேலம் அருகே விஷம் குடித்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சின்னசேலம் அடுத்த பெரியசிறுவத்தூர், கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் நாச்சன் மகன் ராஜாமணி, 36; கூலித் தொழிலாளி. இவரது மனைவி விக்னேஷ்வரி, 32; இவர்களுக்கு, 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. விக்னேஷ்வரி, அவரது அம்மா வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் வீட்டில் தனியே வசித்து வந்த ராஜாமணி நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் வீட்டில் வயலுக்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சிக்கொல்லியை குடித்து மயங்கினார்.
தொடர்ந்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.