/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
50 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
/
50 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
ADDED : மே 10, 2024 12:48 AM
சென்னை, காரில் 50 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், மதுரையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பொன்னியம்மன் பட்டறை டோல்கேட் அருகே, 2022 பிப்., 6ல் காஞ்சிபுரம் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த 'மாருதி ஸ்விப்ட் டிசையர்' காரை சோதனை செய்தனர்.
காரின் பின்பகுதியில் இருந்த 25 பாக்கெட்டுகளில், 50 கிலோ எடையுள்ள கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த மதுரை உசிலம்பட்டி தாலுகாவைச் சேர்ந்த நிலமலை, 40, என்பவரை கைது செய்து, அவர் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணை, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன் விசாரணைக்கு வந்தது. போலீசார் சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.சீனிவாசன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
வழக்கில் தொடர்புடைய நபர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.