/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நீர்நிலைகளில் 227 விநாயகர் சிலைகள் கரைப்பு
/
நீர்நிலைகளில் 227 விநாயகர் சிலைகள் கரைப்பு
ADDED : செப் 09, 2024 11:32 PM

காஞ்சிபுரம் : விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7ம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 310 இடங்களில் விநாயகர் சிலை வைக்க பல்வேறு நிபந்தனையுடன் அரசு அனுமதி வழங்கி இருந்தது.
காஞ்சி மாவட்டம் மற்றும் நகர ஹிந்து முன்னணி சார்பில், 34ம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் காஞ்சிபுரம் ரங்கசாமிகுளம் பகுதியில் இருந்து நேற்று புறப்பட்டது.
முன்னதாக நடந்த கூட்டத்திற்கு அமைப்பின் கோட்ட செயலர் ஆர்.டி.மணி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எஸ்.சந்தோஷ், ஜெ.ஞானவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துாசி சஞ்சீவினி மடத்தின் நிர்வாகி அனுமன் மாதாஜி, பா.ஜ. மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவர் சிவானந்தம், பசுத்தாய் கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் ரங்கசாமி குளக்கரையில் புறப்பட்ட ஊர்வலம், காந்தி சாலை, காமராஜர் வீதி, காஞ்சிபுரம் சங்கரமடம் வழியாக நான்கு ராஜ வீதி வழியாக, மாமல்லபுரத்திற்கு அனுப்பினர்.
மாமல்லபுரம் கடலில், ஒன்றிய துணைத் தலைவர் ஆறுமுகம் மேற்பார்வையில், விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள வீடுகளில் வழிபாடு செய்யப்பட்ட சிறிய களிமண் விநாயகர் சிலைகள், நேற்று திருக்காலிமேடு, சின்ன வேப்பங்குளம், சர்வதீர்த்தகுளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியான கடந்த 7ம் தேதி, 14 சிலைகளும், நேற்று முன்தினம், 18 சிலைகளும் அந்தந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
மூன்றாம் நாளான நேற்று, மாலை 6:00 மணி நிலவரப்படி, காஞ்சிபுரம் காவல் மாவட்ட எல்லையில் உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்ட 227 விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

