/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மனை பட்டா இல்லாமல் 50 குடும்பங்கள் தவிப்பு
/
மனை பட்டா இல்லாமல் 50 குடும்பங்கள் தவிப்பு
ADDED : ஜூன் 28, 2024 10:43 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆண்டிசிறுவள்ளூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட புதுரோடு பகுதியில், கடந்த 20 ஆண்டுகளாக, 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனினும், அவர்களது குடியிருப்பு மனைக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.
இதனால், அரசு சார்பில் வழங்கப்படும் பிரதம மந்திரி வீடுகள் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் போன்ற அரசின் தொகுப்பு வீடுகள் உள்ளிட்ட சலுகைகள் பெற இயலாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி வாசிகள் கூறியதாவது:
ஏரிக்கரையையொட்டி உள்ள சேரிதாங்கல் பகுதியில், இதற்கு முன் வசித்து வந்தோம். பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிக்காக, 20 ஆண்டுகளுக்கு முன், புதுரோடு பகுதிக்கு வந்து அங்குள்ள புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறோம்.
நாங்கள் வசிக்கும் இடத்திற்கு மனை பட்டா கோரி, தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் மனுக்கள் அளித்தும், நேரில் வலியுறுத்தியும் இதுவரை பட்டா கிடைக்கவில்லை.
மேலும், நாங்கள் வசிக்கும் பகுதி நீர்நிலை புறம்போக்கு எனக் காரணம் கூறி தட்டிக் கழித்து வருகின்றனர். எனவே, இந்த நிலத்தை நிலவகை மாற்றம் செய்து, மனை பட்டா வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.