/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு வயிற்றுப்போக்கால் 9 பேர் பாதிப்பு
/
காஞ்சியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு வயிற்றுப்போக்கால் 9 பேர் பாதிப்பு
காஞ்சியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு வயிற்றுப்போக்கால் 9 பேர் பாதிப்பு
காஞ்சியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு வயிற்றுப்போக்கால் 9 பேர் பாதிப்பு
ADDED : ஆக 04, 2024 01:49 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 34வது வார்டு, வள்ளல் பச்சையப்பன் தெருவை ஒட்டியுள்ள குட்டைமேடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்போருக்கு, பாலாற்று குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்பகுதிக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில், கழிவுநீர் கலந்ததால் கடந்த மாதம் 30ம் தேதி முதல், நேற்று வரை, 9 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 7 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதில், நிர்மலா, 55; கோமதி, 24 இருவர் மட்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எங்கள் பகுதியில் கொரோனா வந்தபோதுகூட ஒருவருக்கும் தொற்று ஏற்படவில்லை. ஆனால், தற்போது குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் எங்கள் பகுதியில் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளது. வீட்டில் சேமித்து வைக்கப்படும் குடிநீரில் இரண்டு நாட்களில் புழு வந்து விடுகிறது. இதற்கு, அதிகாரிகள்தான் தீர்வு காண வேண்டும் என, இப்பகுதியினர் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார அலுவலர் அருள்நம்பி, மாநகராட்சி துப்புரவு அலுவலர் சுகவனம் ஆகியோர் குட்டைமேடு பகுதியில், வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்டோர் விபரம் குறித்து கேட்டறிந்தனர்.
குட்டைமேடு பகுதியைச் சேர்ந்த சித்ரா, 45, கூறியதாவது:
ஆறு மாதங்களுக்கு மேலாக கசடு கலந்த குடிநீர் வருகிறது. கடந்த மாதம் 30ம் தேதி வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டது.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்றுதான் வீடு திரும்பினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிர்மலா, 55, கூறியதாவது:
மாநகராட்சி வினியோகம் செய்யும் குடிநீரை பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், கடந்த 1ம் தேதி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டது. அன்று இரவு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பருவநிலை மாற்றம் காரணமாக, பொதுமக்கள் குடிநீரை நன்றாக காய்ச்சி பருகும்படி, ஒலிப்பெருக்கி ஆட்டோ வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, குளோரினேஷன் செய்த குடிநீரை வினியோகம் செய்து வருகிறோம்.
குட்டைமேடு பகுதியில், குடிநீரில் கழிவுநீர் எங்கு கலக்கிறது என, ஆய்வு செய்வதோடு, இப்பகுதிக்கு மாற்று ஏற்பாடாக டேங்கர் லாரி வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யவும், மருத்துவ முகாம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.