/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெல்லை தின்றதால் ஆத்திரம் 7 பசுக்களை சாகடித்த விவசாயி
/
நெல்லை தின்றதால் ஆத்திரம் 7 பசுக்களை சாகடித்த விவசாயி
நெல்லை தின்றதால் ஆத்திரம் 7 பசுக்களை சாகடித்த விவசாயி
நெல்லை தின்றதால் ஆத்திரம் 7 பசுக்களை சாகடித்த விவசாயி
ADDED : மே 03, 2024 08:58 PM
காஞ்சிபுரம்:'அறுவடை செய்த நெல்லை, மாடுகள் தின்று விட்டு செல்வதால், அரிசியில் விஷம் வைத்துக்கொன்றேன்' என, போலீசாரிடம் கைதான நபர் தெரிவித்தார்.
வாலாஜாபாத் அடுத்த தென்னேரி கிராமத்தில், கால்நடை விவசாயிகளுக்கு சொந்தமான ஒன்பது மாடுகள், கடந்த 30ம் தேதி மேய்ச்சலுக்கு சென்றன.
தென்னேரி நெல் கொள்முதல் நிலையம் அருகே, திடீரென ஏழு பசு மாடுகள், ஒன்றன்பின் ஒன்றாக, மயங்கி விழுந்து இறந்தன. உடனடியாக, கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வாலாஜாபாத் தாசில்தார் சதீஷ் மற்றும் வாலாஜாபாத் போலீசார் உயிரிழந்த மாடுகளை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், அரிசியில் விஷம் வைத்து கொன்றிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, கால்நடை விவசாயியான தென்னேரி கிராமத்தைச் சேர்ந்த துலுக்காணம் என்பவர் அளித்த புகாரின் படி, அதே கிராமத்தைச் சேர்ந்த பொன்வேலு என்கிற ஜானகிராமன் என்பவரை கைது செய்தனர்.
விசாரணைக்கு பின், வாலாஜாபாத் போலீசார் கூறியதாவது:
நெல் கொள்முதல் நிலையத்தில், ஜானகிராமன் கொட்டி வைத்திருந்த நெல்லை, துலுக்காணம் வளர்த்த மாடுகள் மிதித்து சேதப்படுத்தியதோடு, அதிக அளவில் தின்று விட்டன.
இதனால் ஆத்திரமடைந்த ஜானகிராமன், வயலுக்கு பயன்படுத்துவதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை அரிசியில் கலந்து வைத்திருக்கிறார்.
இதையடுத்து, வழக்கமாக மேய்ச்சலுக்கு வந்த துலுக்காணத்தின் மாடுகள், விஷம் கலந்த நெல்லை தின்று விட்டு உயிரிழந்து விட்டன. ஜானகிராமனை கைது செய்து, மேலும் விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.