/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அழிசூரில் குடிநீர் தட்டுப்பாடு போக்க கோரிக்கை
/
அழிசூரில் குடிநீர் தட்டுப்பாடு போக்க கோரிக்கை
ADDED : மே 01, 2024 10:52 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது அழிசூர் கிராமம்.இப்பகுதியில், 1,000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இந்த கிராமத்தினரின் குடிநீர் தேவைக்கு அப்பகுதி ஏரி அருகே இரண்டு திறந்தவெளி கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில் இருந்து, உறிஞ்சப்படும் தண்ணீர், பூமிக்கடியில் புதைக்கப்பட்ட குடிநீர் பைப் வாயிலாக, மூன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏற்றி, அழிசூர் கிராமத்தினருக்கு ஊராட்சி சார்பில், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், இப்பகுதியில் சில மாதங்களாக சீராக குடிநீர் வினியோகிக்காமல் சுழற்சி அடிப்படையில் 10 நாட்களுக்கு ஒரு முறை குழாய்களில் குடிநீர் அளிப்பதாக கூறப்படுகிறது.
தற்போது கோடைக்காலமாக உள்ளதால், குடிநீர் தேவைக்கு மிகவும் சிரமப்படுவதாக அப்பகுதியினர் புலம்புகின்றனர்.
இது குறித்து அழிசூர் கிராமத்தினர் கூறியதாவது:
அழிசூரில் குழாய் இணைப்பு மூலம் வினியோகிக்கும் குடிநீர் தவிர மாற்று குடிநீர், வசதி ஏதும் இல்லை. ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து கைவிடப்பட்ட தமிழ்நாடு குடிநீர் வாரிய கூட்டு குடிநீர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை.
குறைந்தது 10 நாட்களுக்கு ஒரு முறை என, குடிநீர் வினியோகம் செய்வதால், இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் சிலாம்பாக்கம் கிராமத்திற்கு சென்று தினசரி குடிநீர் எடுத்து வருகிறோம்.
எனவே, இப்பகுதியில் தினந்தோறும் குடிநீர் வினியோகிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அவர்கள் கூறினர்.

