/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆவடி நகை கொள்ளை வழக்கு குற்றவாளிகள் ராஜஸ்தானில் கைது
/
ஆவடி நகை கொள்ளை வழக்கு குற்றவாளிகள் ராஜஸ்தானில் கைது
ஆவடி நகை கொள்ளை வழக்கு குற்றவாளிகள் ராஜஸ்தானில் கைது
ஆவடி நகை கொள்ளை வழக்கு குற்றவாளிகள் ராஜஸ்தானில் கைது
ADDED : மே 03, 2024 10:51 PM

ஆவடி:துப்பாக்கி முனையில், ஆவடி கடையில் இரண்டரை கிலோ நகை கொள்ளையடித்த, வடமாநில கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, எல்லையம்மன் நகரைச் சேர்ந்த பிரகாஷ், 33, தன் வீட்டின் கீழ் தளத்தில் நகைக்கடை மற்றும் அடகுகடை நடத்தி வருகிறார்.
கடந்த மாதம் 15ம் தேதி மதியம், இவரது கடைக்கு, 'மாருதி சுவிப்ட்' காரில் வந்த மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் பிரகாஷை மிரட்டி, 2.5 கிலோ தங்க நகை, வெள்ளி நகை, 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து, முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இந்நிலையில், ஆவடி பாலவேடு அருகே, ராஜஸ்தான் மாநிலம், ஹரிபுரா கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், 24, துங்கார்வா கிராமத்தைச் சேர்ந்த ஷீட்டான் ராம், 24, ஆகியோர் போலீசில் சிக்கினர்.
இவர்கள், கொள்ளையர்களுக்கு தங்க இடம் கொடுத்து, கொள்ளைக்கு உதவியதும் தெரிந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், 3 கிராம் தங்க நகை, 105 கிராம் வெள்ளி நகை, 60,000 ரூபாய், இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலின்படி, ராஜஸ்தானுக்கு தப்பிய முக்கிய குற்றவாளிகள் அசோக்குமார், 25, சுரேஷ், 27, ஆகியோரை, கடந்த மாதம் 30ம் தேதி, ராஜஸ்தான் போலீசார் உதவியுடன் கைது செய்தனர்.
அவர்களை நேற்று முன்தினம் சென்னைக்கு அழைத்து வந்து, 703 கிராம் தங்க நகை, 4.3 கிலோ வெள்ளி நகை, இரு ஐபோன்களை பறிமுதல் செய்தனர்.
பழைய குற்றவாளியான அசோக்குமார் மீது, ராஜஸ்தானில் குற்ற வழக்குகள் உள்ளன.
இதுகுறித்து, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் கூறியதாவது:
இரண்டரை கிலோ நகை கொள்ளை போன நிலையில், தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்று, முக்கிய குற்றவாளிகளை கைது செய்து, 700 கிராம் தங்க நகை, 4 கிலோ வெள்ளி நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுவரை, 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் நால்வரை தேடி வருகிறோம்; விரைவில் பிடித்து விடுவோம். அவர்கள், கொள்ளையடித்த நகைகளை பங்கு பிரித்துக் கொண்டு சென்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.