ADDED : ஜூன் 15, 2024 12:03 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏனாத்துார் சங்கரா பல்நோக்கு மருத்துவமனை, கிழக்கு ரோட்டரி சங்கம், சங்கரா நர்சிங் கல்லுாரி, பல்லவன் பார்மசி கல்லுாரி சார்பில், காஞ்சிபுரத்தில் நேற்று ரத்த தான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சங்கரா பல்நோக்கு மருத்துவமனையின் தலைவர் பம்மல் விஸ்வநாதன் தலைமை வகித்தார். சங்கரா குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி, நர்சிங் கல்லுாரி முதல்வர் ராதிகா, சங்கரா மருத்துவமனையின் நிர்வாக அலுவலர் நந்தகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ரத்த வங்கியின் பொறுப்பாளர் மோகன் வரவேற்றார்.
காஞ்சிபுரம் போலீஸ் டி.எஸ்.பி., முரளி பேரணியை துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திலிருந்து துவங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.
l காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க பெண் மருத்துவர்கள் பிரிவு சார்பில், உலக ரத்த தான தினத்தையொட்டி, மருத்துவர்களுக்கான மருத்துவக் கருத்தரங்கம், செவிலியர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சு.மனோகரன் தலைமை வகித்து, இந்திய மருத்துவ சங்கம் நடத்திய முகாம்களில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். பெண் மருத்துவர்கள் பிரிவு தலைவர் டாக்டர் எம். நிஷாப்ரியா அறிமுக உரை நிகழ்த்தினார்.
சென்னை எம்.ஜி.எம்., புற்றுநோய் மையத்தின் முதுநிலை மார்பக புற்றுநோய் சிறப்பு மருத்துவ வல்லுனர் டாக்டர் வேத பத்மப்பிரியா, சிறப்பு கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவ வல்லுனர் டாக்டர் பி. தீபிகா உள்ளிட்டோர் கருத்தரங்க உரையாற்றினர்.