/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சீயமங்கலம் பாலாற்றங்கரையோரம் அனுமதியின்றி செங்கல் சூளை
/
சீயமங்கலம் பாலாற்றங்கரையோரம் அனுமதியின்றி செங்கல் சூளை
சீயமங்கலம் பாலாற்றங்கரையோரம் அனுமதியின்றி செங்கல் சூளை
சீயமங்கலம் பாலாற்றங்கரையோரம் அனுமதியின்றி செங்கல் சூளை
ADDED : மார் 11, 2025 12:25 AM
வாலாஜாபாத், வாலாஜாபாத் ஒன்றியம், திம்மராஜம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்டது சீயமங்கலம் கிராமம். இக்கிராமத்தில், பாலாற்றங்கரையோரம் பல ஏக்கர் பரப்பில் விவசாய நிலங்கள் உள்ளன.
இந்த நில உரிமையாளர்களில் சிலர், தங்களது நிலங்களில் செங்கல் சூளை போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள், சூளை அமைப்பது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடத்தில் அனுமதி ஏதும் பெறாமல் இப்பணிகளை மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.
செங்கல் அறுக்க தங்களது நிலங்களில், அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி மண் எடுப்பதாகவும், இதனால், மழைக்காலங்களில் ஆற்றங்கரையை கடந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளதாக அப்பகுதியினர் அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து, சீயமங்கலம் கிராமத்தினர் கூறியதாவது:
இப்பகுதியில் தனிநபர்களது செங்கல் சூளைகள் அதிகரித்து வருகிறது. 3 அடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளக்கூடாது என்ற விதி இருந்தும் செங்கல் சூளை நடத்துவோர் அதை பின்பற்றுவதில்லை.
ஊராட்சி பகுதிகளில் பட்டா நிலங்களில் செங்கல் சூளை நடத்துவோர், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் தடையில்லா சான்று பெற்று ஒன்றிய நிர்வாகத்திடம் அனுமதிக்கக் கோரி மனு அளிக்க வேண்டும். அதையும் கடை பிடிக்காமல் தன்னிச்சையாக நடத்துகின்றனர்.
இதனால், ஆற்றங்கரையோரம் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு, அங்கு தாழ்வான பகுதிகள் உருவாகிறது. மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடும் நிலை உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு இத்தகைய நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து, இப்பகுதியில் யாரும் செங்கல் சூளை நடத்தக்கூடாது என முடிவெடுத்து ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனினும், அதை மீறி தற்போது தனியாரது செங்கல் சூளைகள் அதிகரித்துள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அவர்கள் கூறினர்.