ADDED : ஏப் 24, 2024 11:58 PM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், வாரணவாசி ஊராட்சிக்கு உட்பட்டது ஆம்பாக்கம் கிராமம். இந்த கிராமத்திற்கான குடிநீர் தேவைக்கு, அப்பகுதியில் ஆழ்த்துளை கிணறு அமைத்து அதன் மூலம் உறிஞ்சப்படும் தண்ணீரை அப்பகுதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், ஆம்பாக்கம், வீரபாண்டி கட்டபொம்மன் தெருவில், தனிநபர் ஒருவர் தன் வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பொருத்த பள்ளம் தோண்டிய போது பூமிக்கடியில் புதைக்கப்பட்ட குடிநீர் பைப் உடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
அது முதல், உடைப்பு ஏற்பட்ட பைப் இதுவரை சீர் செய்யாததால், தண்ணீர் கசிவு ஏற்பட்டு தொடர்ந்து குடிநீர் வீணாகி வருகிறது. மேலும், கசிவு ஏற்பட்டு தேக்கமாகும் தண்ணீர் மீண்டும் பைப் வழியாக வீட்டு இணைப்பு குழாய்களுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளதால், குடிநீர் மாசாகி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, ஆம்பாக்கம், வீரபாண்டி கட்டபொம்மன் தெருவில் உடைபட்ட குடிநீர் பைப்பை சீர் செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

