/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
100 நாள் வேலை நடக்கும் இடங்களில் பணியாளர்களுக்கு வெப்ப தடுப்பு ஏற்படுத்த 'சர்குலர்'
/
100 நாள் வேலை நடக்கும் இடங்களில் பணியாளர்களுக்கு வெப்ப தடுப்பு ஏற்படுத்த 'சர்குலர்'
100 நாள் வேலை நடக்கும் இடங்களில் பணியாளர்களுக்கு வெப்ப தடுப்பு ஏற்படுத்த 'சர்குலர்'
100 நாள் வேலை நடக்கும் இடங்களில் பணியாளர்களுக்கு வெப்ப தடுப்பு ஏற்படுத்த 'சர்குலர்'
ADDED : மே 04, 2024 10:27 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், மத்திய அரசு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ஊராட்சிகளில், 1.28 லட்சம் குடும்பங்களில், 1.98 லட்சம் பேர், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். இதில், 1.45 லட்சம் பேருக்கு, 100 நாள் வேலைக்குரிய வருகை பதிவேடு புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
வாரத்திற்கு ஆறு நாட்கள் என, சுழற்சி முறையில், 100 நாள் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படுகின்றன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40,918 பேருக்கு, 100 நாள் வேலை வழங்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 43 டிகிரி செல்சியஸ் வெயில் தினசரி அடித்து வருகிறது. இந்த வெயிலால், மக்கள் வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
மேலும், அக்னி நட்சத்திரம் என, அழைக்கப்படும் கத்திரி வெயில் நேற்று முதல் துவங்கியது. இந்த வெயிலால், பல தரப்பினர் வெகுவாக பாதிக்கப்படுவர் என, அச்சம் எழுந்துள்ளது.
குறிப்பாக, வெயிலில் வேலை செய்யும் கூலித்தொழிலாளர்கள், வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளை களைவதற்கு, சென்னை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர், அந்தந்த கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
இதை, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர், 100 நாள் வேலை நடக்கும் இடங்களில், என்னென்ன வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.
இந்த சுற்றறிக்கையில் கூறியதாவது:
நுாறு நாள் வேலை நடக்கும் இடங்களில், பணியாளர்களுக்கு ஏற்ப, நிழல் வலை அமைக்க வேண்டும். நுாறு பணியாளர்களுக்கு, தட்டுப்பாடு இன்றி, வேலை நடக்குமிடங்களில், குடிநீர் வழங்க வேண்டும்.
முதலுதவி பெட்டி, அவசியமாக வைத்திருக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ்., உப்பு, சர்க்கரை கரைசல் மற்றும் வீடுகளில் தயாரிக்கப்படும் லஸ்சி, அரிசி நீர் என, அழைக்கப்படும் நீராகாரம், எலுமிச்சை நீர், மோர் ஆகியவை வழங்க வேண்டும்.
இதுதவிர, தொழிலாளர்கள் அவசியமாக, தொப்பி, காலணிகள் அணிந்திருக்க வேண்டும். மேலும், வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டால், உடனடியாக அருகில் இருக்கும் சுகாதார மையத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.