காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், சமீப காலமாக ரேஷன் அரிசி, பருப்பு போன்ற பொது வினியோக திட்ட பொருட்கள் கடத்துவதும், அவற்றை பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் அருகேயுள்ள, சிறுகாவேரிப்பாக்கம், பச்சையம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள சந்திரன் என்பவரின் மாவு மில்லில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது, 38 சிப்பங்களில், 1,950 கிலோ பொது வினியோக திட்டத்தில் வழங்கப்பட்ட பச்சரிசி உரிய ஆவணங்கள் இன்றி இருந்ததை, பொது வினியோக திட்ட அதிகாரிகள், நேற்று முன்தினம் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்தனர்.
கைப்பற்றப்பட்ட அரிசியை, நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. பொது வினியோக திட்ட அரிசியை அப்பளம் தயாரிக்கும் தொழிலுக்கு பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது.
அவ்வாறு, முறைகேடாக அரிசியை பயன்படுத்தும் நபர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.