கோவில் இடத்தை ஆக்கிரமித்து நடந்த கட்டுமான பணி நிறுத்தம்
கோவில் இடத்தை ஆக்கிரமித்து நடந்த கட்டுமான பணி நிறுத்தம்
ADDED : ஆக 05, 2026 08:22 PM
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் இடத்தை ஆக்கிரமித்து, கட்டப்பட்டு வந்த அம்மன் கோவிலுக்கான கட்டுமான பணிகள், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக நிறுத்தப்பட்டது.
திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது.
ஒரகடம் சாலை சந்திப்பு பகுதியில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில், தனிநபர்கள் சிலர் இணைந்து, பல ஆண்டுகளுக்கு முன், அம்மன் கோவில் அமைத்தனர். அதையொட்டி, நாளடைவில் கட்டடம் கட்டினர். கட்டட பகுதியை விரிவுபடுத்தி தற்போது புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, நம் நாளிதழில், சமீபத்தில் செய்தி வெளியானது. இதையடுத்து, வேதகிரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் வெங்கடேசன், தனியார் கோவில் கட்டுமானத்தை இருதினங்களுக்கு முன் பார்வையிட்டு, பணிகளை நிறுத்தினார்.
ஆக்கிரமிப்பில் இருந்து வெளியேற, நோட்டீஸ் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
