/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கல் குவாரி அமைக்க கருத்துக்கேட்பு கூட்டம்
/
கல் குவாரி அமைக்க கருத்துக்கேட்பு கூட்டம்
ADDED : பிப் 28, 2025 11:58 PM
உத்திரமேரூர் :உத்திரமேரூர் ஒன்றியம் பழவேரி கிராமத்தில், புதிதாக தனியார் கல் குவாரி அமைக்க, பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் சப் - கலெக்டர் ஆசிக் அலி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புருஷோத்தம்மன் மற்றும் கனிமவளத்துறை துணை இயக்குநர் வேடியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், பழவேரி, திருமுக்கூடல், சீத்தாவரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கல் குவாரி அமைந்தால், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்பதால், குவாரிக்கு தடை விதிக்க சிலர் வலியுறுத்திப் பேசினர்.
அதே சமயத்தில், தங்கள் பகுதியில் கல் குவாரி அமைந்தால், ஊராட்சிக்கு கனிமவள நிதி மற்றும் வேலை வாய்ப்பு கிடைக்கும். எனவே, அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, அனைவருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் குவாரி இயக்க வேண்டும் என, சிலர் கருத்து தெரிவித்தனர்.
மேலும், கல் குவாரி பகுதி சாலைகளில், காலை - மாலை பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். குவாரிகளில் இருந்து அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக லாரிகள் மற்றும் தார்ப்பாய் மூடாத லாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களையும் முன் வைத்தனர்.
கூட்டத்தில், பேசியவர்களின் கருத்துக்கள் வீடியோ காட்சியுடன் பதிவு செய்யப்பட்டது. அப்பதிவு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு அனுப்பப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.