/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீட்டுமனை வழங்காததால் தேர்தலை புறக்கணிக்க முடிவு
/
வீட்டுமனை வழங்காததால் தேர்தலை புறக்கணிக்க முடிவு
ADDED : ஏப் 16, 2024 11:20 PM

செய்யூர்:செய்யூர் அருகே வேட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விளங்கனுார் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.
அரசு சார்பாக, 30 ஆண்டுகளுக்கு முன் 39 வீட்டுமனைகள் வழங்கப்பட்டன. நாளடைவில் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக, போதிய இட வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கடந்த 19 ஆண்டுகளாக புதிய வீட்டுமனைகள் வழங்கக்கோரி, துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால், விளங்கனுார் கிராம மக்கள் விரக்தியடைந்தனர்.
அதனால், 19ம் தேதி நடக்க உள்ள லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப்போவதாக, கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.
தேர்தல் புறக்கணிப்பு குறித்து, பேருந்து நிறுத்தம், விளையாட்டு மைதானம் போன்ற பொது இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:
விளங்கனுார் கிராமத்தில், 30 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இங்கு, வீடு கட்ட போதிய இடவசதி இல்லாமல், கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
அதை மீட்டு எங்களுக்கு புதிய வீட்டுமனைகள் வழங்க வேண்டும் என, பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
புதிய வீட்டுமனைகள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், எங்கள் கிராமத்தில் உள்ள, 400 வாக்காளர்களும், நடக்க உள்ள லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

